ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 110 பேர் காயம்


ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 110 பேர் காயம்
x
தினத்தந்தி 12 Feb 2021 12:56 AM IST (Updated: 12 Feb 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 110 பேர் காயமடைந்தனர்.

அன்னவாசல்
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை அடுத்த திருநல்லூரில் நடைபெறும் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை அமைச்சர் விஜயபாஸ்கர், தென்னலூர் பழனியப்பன், வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
 முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு, போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டன. பின்னர், ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
110 பேர் காயம்
அந்த காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து திடலுக்கு வந்தன. அந்த காளைகளை 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். அவற்றில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அதன் திமிலை பிடித்து அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் ஓடின. சில காளைகள் தன்னை பிடிக்க முயன்ற வீரர்களை தூக்கி வீசியும், காலால் மிதித்து விட்டும் ஓடின. இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 110 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். 
18 பேர் மருத்துவமனையில் அனுமதி
அவர்களில் படுகாயமடைந்த ஆலத்தூர் நாராயணன் (வயது 19), கலியமங்கலம் பன்னீர்செல்வம் (48), அம்மாசத்திரம் அழகர்சாமி (19), ஸ்ரீரங்கம் வள்ளிக்கண்ணு (65), திருச்சி கவியரசன் (37) உள்பட 18 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி, புதுக்கோட்டை, மணப்பாறை போன்ற அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Next Story