அழகர்மலை நூபுரகங்கை தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடினர்


அழகர்மலை நூபுரகங்கை தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடினர்
x
தினத்தந்தி 12 Feb 2021 1:17 AM IST (Updated: 12 Feb 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

தை அமாவாசையையொட்டி அழகர்மலை நூபுரகங்கை தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடினர்.

அழகர்கோவில்
தை அமாவாசையையொட்டி அழகர்மலை நூபுரகங்கை தீர்த்தத்தில்  பக்தர்கள் புனித நீராடினர்.
நூபுரகங்கை தீர்த்தம்
மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலின் அழகர்மலை உச்சியில் நூபுரகங்கை தீர்த்தம் வற்றாத புனித நீரூற்றாக எப்போதும் வழிந்து கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 11 மாத காலமாக இங்கு நீராட தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அரசு வழி காட்டுதல்படி கடந்த 1-ந் தேதி முதல் நீராட பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. 
இதைதொடர்ந்து நேற்று தை மாத அமாவாசையையொட்டி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நூபுரகங்கையில் புனித நீராடினர். மேலும் சர்வ அலங்காரத்தில் காட்சி தந்த ராக்காயி அம்மனுக்கு விளக்கேற்றி தரிசனம் செய்தனர். தை மாதத்தில் அழகர்மலை தீர்த்தத்தில் நீராடினால் புதுப்பாதை திறக்கும் என்பது பல வருடமாக இருந்து வரும் ஐதீகமாகும்.
மேலும் சோலைமலை முருகன் கோவிலில் உற்சவர், மூலவர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. இங்கும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர், பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவிலிலும் நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தந்தார். முன்னதாக விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைச்சல் பெற்ற நெல் உள்ளிட்ட தானிய வகைகளை கள்ளழகர் கோவிலில் காணிக்கையாக செலுத்தினர்.
தை அமாவாசை விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா, உள்துறை அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் தை மாத அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி ஏராளமானோர் அங்கு குவிந்தனர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் இறந்துபோன தனது தந்தை, தாய் மற்றும் அவர்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதனையொட்டி நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து 10 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக சரவண பொய்கை தர்ப்பணம் செய்தவர்களால் களைகட்டியது.

Next Story