திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் வலம் வந்த தங்கத் தேர்
திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 11 மாதத்திற்கு பிறகு தங்கத் தேர் நேற்று வலம் வந்தது
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 11 மாதத்திற்கு பிறகு தங்கத் தேர் நேற்று வலம் வந்தது. கோவில் அதிகாரிகள் வடம்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
தங்கத்தேர்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அரசியல் கட்சியினர் தங்களது தலைவர்கள் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி தங்கத் தேர் இழுத்து வழிப்பட்டு வந்தனர். இதே பக்தர்கள் தங்களது பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களை கொண்டாடும் விதமாகவும், திருமணம் மற்றும் குழந்தை வரம் கேட்டும் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி தங்கத் தேர் இழுத்து வழிப்பட்டு வந்தனர்.
கோவிலுக்குள் தங்கத்தேர் வலம் வருவதால் கோவிலுக்கு கணிசமான வருமானம் கிடைத்தது. கடந்த ஆண்டில் மார்ச் மாதம் 17-ந்தேதி பக்தர்கள் தங்கத்தேர் இழுத்தனர். இந்த நிலையில் உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டில் மாதம் 20-ந்தேதி கோவில் மூடப்பட்டது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திறகு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையில் கடந்த 3-ந்தேதி முதல் அர்ச்சனைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
11 மாதத்திற்கு பிறகு
இந்த நிலையில் தை அமாவாசையையொட்டி கடந்த 11 மாதத்திற்கு பிறகு கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் தங்கத்தேர் வலம் வந்தது. கோவில் உள்துறை சூப்பிரண்டு அங்கயற்கன்னி, உதவி கோட்டப் பொறியாளர் சிவமுருகானந்தம், பேஸ்கார்கள் தேவகி, புகழேந்தி மற்றும் கோவில் ஊழியர்கள் தங்கத்தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்கள் தங்கத் தேர் இழுக்க பதிவு செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகவே பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தங்கத் தேர் இழுத்து வழிபடுவதற்காக ஆர்வத்துடன் முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.
Related Tags :
Next Story