தை அமாவாசையையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தை அமாவாசையையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நேற்று குவிந்தனர்.
சமயபுரம்,
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தை அமாவாசையை முன்னிட்டு நேற்று திரளான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் ராஜகோபுரத்தின் முன்பு தேங்காய் உடைத்து, தீபமேற்றி வழிபட்டனர்.
பின்னர், தீபம் ஏற்றும் இடத்தில் நெய் விளக்கேற்றினர். மேலும் மாவிளக்கு எடுத்தும், கரும்புதொட்டிலில் குழந்தைகளை சுமந்தும், முடிகாணிக்கை கொடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
அதைத்தொடர்ந்து அம்மனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து ஒவ்வொருவராக கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர். இணை ஆணையர் அசோக்குமார் அறிவுரையின்படி கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பக்தர்களை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் சமயபுரத்துக்கு வந்திருந்தனர். வழக்கமாக வருகின்ற பக்தர்களின் கூட்டத்தை விட அதிக அளவு பக்தர்கள் வந்ததால் சமயபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு போன்ற குற்றங்களை தடுக்க, சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story