ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்; காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்


ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்; காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்
x
தினத்தந்தி 12 Feb 2021 2:18 AM IST (Updated: 12 Feb 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

தை அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் நேற்று புனிதநீராடி, அம்மா மண்டபத்தில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஸ்ரீரங்கம், 

மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அமாவாசை சிறந்த நாளாகும். அதிலும் உத்தராயண புண்ணிய காலத்தில் (தை மாதம்) வரும் அமாவாசையும், தட்சிணாய காலத்தில் (ஆடி மாதம்) வரும் அமாவாசையும் மிகவும் விசேஷமானது. தாய்-தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் தை, ஆடி மாத அமாவாசை அன்று திதி கொடுக்கலாம் என்பது ஐதீகம்.

தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் ஆறுகள், கடல் போன்ற புண்ணிய நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் உள்ளிட்ட பிதுர் கர்மாக்கள் செய்வது இந்துக்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் மூதாதையர்கள் பசியும், தாகமும் விலகி நமக்கு ஆசி வழங்குவர் என்பது நம்பிக்கை.

அம்மா மண்டபம் படித்துறை

இதனால் தை அமாவாசையான நேற்று காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர். அதன்படி, திருச்சியில் காவிரி ஆற்றின் கரையில் உள்ள ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் கூடி புனித நீராடினர்.

தொடர்ந்து அங்குள்ள புரோகிதர்கள் உதவியுடன் எள்ளும், தண்ணீரும் இரைத்து தர்ப்பணம் செய்தும், பிண்டம் கரைத்தும் பிதுர் கர்மாக்களை நிறைவேற்றினர். சிலர் அன்னதானம் போன்ற அறச்செயல்களிலும் ஈடுபட்டனர். இதுபோல் கருடமண்டபம் படித்துறையிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

இதன் காரணமாக நேற்று அதிகாலை தொடங்கி மாலை வரை மாம்பழச்சாலையில் இருந்து ஸ்ரீரங்கம் வரை மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. தை அமாவாசைக்கு வரும் மக்களின் பாதுகாப்புக்கென ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

கோவில்களில் அதிக கூட்டம்

மேலும் புனிதநீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்தவர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உள்பட திருச்சி மற்றும் சுற்றுப்பகுதி முக்கிய கோவில்களில் நேற்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இருந்தபோதிலும் கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு தை அமாவாசையை ஒப்பிடும்போது இந்தாண்டு கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story