நூல் விலை கடும் உயர்வு: 30 ஆயிரம் விசைத்தறிகளின் உற்பத்தி நிறுத்தம்


நூல் விலை கடும் உயர்வு: 30 ஆயிரம் விசைத்தறிகளின் உற்பத்தி நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Feb 2021 2:27 AM IST (Updated: 12 Feb 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

நூல் விலை கடுமையாக உயர்ந்ததன் எதிரொலியாக ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறிகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு
நூல் விலை கடுமையாக உயர்ந்ததன் எதிரொலியாக ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறிகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
30 ஆயிரம் விசைத்தறிகள்
ஈரோடு, அசோகபுரம், மாணிக்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சூளை, சூரம்பட்டி, சித்தோடு, லக்காபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தயாரிக்கப்படும் ரயான் துணி குஜராத், மராட்டியம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ரயான் நூல் விலை உயர்ந்தது. இதனால் விசைத்தறியாளர்களுக்கு உரிய லாபம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். எனவே நூல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
உற்பத்தி நிறுத்தம்
இந்தநிலையில் நூல் விலை உயர்வை கண்டித்தும், நஷ்டம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும் ஈரோட்டில் உள்ள விசைத்தறிகளில் ரயான் துணிகளை உற்பத்தி செய்வதை 11 நாட்களுக்கு நிறுத்தி வைக்க விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் விசைத்தறிகள் நேற்று செயல்படவில்லை.
இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் கூறுகையில், “ஈரோடு பகுதிகளில் உள்ள 30 ஆயிரம் விசைத்தறிகளில் தினமும் சுமார் 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதால் ஒரு நாளுக்கு ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பிலான துணிகள் உற்பத்தி பாதிக்கப்படும். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையைின்போது ஒரு கிலோ நூல் சுமார் ரூ.160 ஆக இருந்தது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.230 வரை விற்பனையாகிறது. நூல் விலை உயர்வுக்கு ஏற்ப துணிகளின் விலை உயரவில்லை. எனவே நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.

Next Story