பிசியோதெரபிஸ்டுக்கு 11 ஆண்டு சிறை


பிசியோதெரபிஸ்டுக்கு 11 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 12 Feb 2021 3:19 AM IST (Updated: 12 Feb 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே 10-ம் வகுப்பு பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பிசியோதெரபிஸ்டுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்:
பள்ளி மாணவி பலாத்காரம் 
திண்டுக்கல் அருகே உள்ள கோட்டைபட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 48). பிசியோதெரபிஸ்ட். கடந்த 2019-ம் ஆண்டு இவருடைய உறவினரின் 15 வயதுடைய மகள், தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவியை நன்றாக படிக்க வைப்பதாக கூறி, தங்கவேல் தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அங்கு வைத்து மாணவியை மிரட்டி, தங்கவேல் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், மாணவியின் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்பட்டது.

 இதைத் தொடர்ந்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தில் தங்கவேலை கைது செய்தனர்.

11 ஆண்டுகள் சிறை 
இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி புருஷோத்தமன் வழக்கை விசாரித்தார். அப்போது அரசு டாக்டர் உள்பட மொத்தம் 18 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர். 

அரசு தரப்பில் வக்கீல் கோப்பெருந்தேவி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து, நீதிபதி புருஷோத்தமன் நேற்று தீர்ப்பளித்தார்.

அதில் குற்றம்சாட்டப்பட்ட தங்கவேலுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். அதோடு அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

Next Story