அரசு ஊழியர்கள் சாலை மறியல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 60 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட அரசு பணியாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு பணியாளர்களுக்கு 21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகை, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், நியாயவிலை கடை பணியாளர்களுக்கு டி.என்.சி.எஸ்.சி.-க்கு இணையான ஊதியம் மற்றும் தனித்துறை, டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத சத்துணவு, அங்கன்வாடி ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் அனைத்து துறை துப்புரவு பணியாளர்களுக்கு நிரந்தரகால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
சாலை மறியல்
அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் திடீரென திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 160 அரசு ஊழியர்களை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story