ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்யம் டிகிரி செல்சியஸ்
உறைபனி தாக்கம் அதிகரிப்பால் ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்யம் டிகிரி செல்சியசாக பதிவானது. இதனால் கடுங்குளிர் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பகலில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது. இந்த நிலையில் நகரில் வழக்கத்துக்கு மாறாக கடும் குளிர் நிலவியது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானம், குதிரை பந்தய மைதானம், ரெயில் நிலைய வளாகம், விளையாட்டு மைதானங்களில் உள்ள புல்வெளிகள், விளைநிலங்களில் காய்கறி பயிர்கள் மீது உறைபனி படர்ந்து காணப்படுகிறது
பூஜ்யம் வெப்பநிலை
மரங்களுக்கு அடியில் புல்வெளிகளில் இருந்த உறைபனி காலை 9 மணியை கடந்தும் உருகாமல் அப்படியே இருந்தது. ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்யம் டிகிரி செல்சியசாக பதிவானது.
உறைபனி தாக்கம் தொடங்கி இதுவரை குறைந்த பட்சமாக 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக பதிவாகி வந்தது. தற்போது பூஜ்யத்தை தொட்டு உள்ளதால் கடும் குளிர் வாட்டி வருகிறது.
ஐஸ்கட்டியாக மாறியது
தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள், புல்வெளிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சிறிய குழாய்கள் உள்ளன. அந்த குழாய்களை எடுத்து பணியாளர்கள் தண்ணீர் பாய்ச்ச முயன்றபோது, குழாய்களுக்குள் இருந்த தண்ணீர் உறைபனி காரணமாக ஐஸ்கட்டியாக மாறி வெளியே வந்து விழுந்தது.
இது உறைபனி அதிகமாக உள்ளதை காட்டுகிறது. அங்கு புல்வெளிகள் கருகாமல் இருக்க தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. வனப்பகுதிகளை ஒட்டி உள்ள பகுதிகளில் பூஜ்யத்துக்கு கீழ் பதிவாகி வருகிறது. வீடுகளுக்கு முன்பாக நிறுத்தப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மீது கண்ணாடி தெரியாத வகையில் உறைபனி படர்ந்து இருக்கிறது.
பொதுமக்கள் அவதி
இதனால் வாகனங்களை எளிதில் இயக்க முடிவது இல்லை. என்ஜினில் சூடான தண்ணீரை ஊற்றிய பின்னர் இயக்க முடிகிறது. கடுங்குளிரால் வீடுகளில் பொதுமக்கள் சூடான தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். வீடுகளை சூடாக வைக்க ஹீட்டர் பயன்படுத்துகிறார்கள்.
காலதாமதமாக உறைபனி தொடங்கினாலும் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். சுற்றுலா பயணிகள் காலையில் தங்கும் விடுதிகளில் முடங்கும் நிலை உள்ளது. காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் ஏற்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story