அரசு பணியாளர் சங்கத்தினர் சாலை மறியல்
25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் அரசு பணியாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 17 பெண்கள் உள்பட 101 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் அரசு பணியாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 17 பெண்கள் உள்பட 101 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
நாகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெற்றி செல்வம், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் மகேந்திரன், துணை தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
21 மாத கால 8-வது ஊதியக்குழு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தொகுப்பூதியம், தினக்கூலி, சிறப்பு காலமுறை, ஊதியம் பெற்று வரும் அரசு மற்றும் அரசு துறை நிறுவன பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். கூட்டுறவுத்துறை நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு இணையான ஊதியம், ஓய்வூதியம், பணிவரன்முறை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
101 பேர் கைது
டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து அதன் அடிப்படையில் அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும். மக்கள்தொகை அடிப்படையிலும், வருமானத்தின் அடிப்படையிலும் ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும்.
வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக 17 பெண்கள் உள்பட 101 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story