வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழ்ஒரத்தூரை சேர்ந்தவர் அய்யாவு. இவருடைய மகன் மணிவாசகம் (வயது 26). இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது.
இந்த நிலையில் மணிவாசகம், அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 25.10.2014 அன்று திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடத்தி சென்றார். பின்னர் 26.10.2014 அன்று திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து மணிவாசகம், அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
பலாத்காரம்
இதையடுத்து மணிவாசகம், தொடர்ந்து திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து, அந்த சிறுமியை பலாத்காரம் செய்தார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியை மீட்டனர்.
தொடர்ந்து சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த மணிவாசகத்தை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் அதற்கு உடந்தையாக இருந்த மணிவாசகத்தின் பெற்றோர் மற்றும் உறவினர் ஒருவர் என 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
10 ஆண்டு சிறை
பின்னர் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட மணிவாசகத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் மணிவாசகத்தின் பெற்றோர் மற்றும் உறவினர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்கள் 3 பேரும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
ரூ.3 லட்சம் இழப்பீடு
மேலும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகள் படி அல்லது மாநில அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலம் 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story