கிருஷ்ணகிரியில் ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் சாலை மறியல் 60 பேர் கைது
கிருஷ்ணகிரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சங்கர், செயலாளர் நாகேஷ், பொருளாளர் நித்யானந்தம், துணைத் தலைவர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் மக்தும்கான் நன்றி கூறினார்.
இந்த மறியல் போராட்டத்தில், ஊதிய உயர்வு குழு அறிக்கையை பெற்று டி.என்.சி.எஸ்.சி.க்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். பணிவரன்முறை செய்யப்படாத 5 ஆயிரம் பணியாளர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும்.
60 பேர் கைது
அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் அல்லது ஓய்வு பெறும் இறுதி மாத ஊதியத்தில் சரிபாதி இதில் எது அதிகமோ அந்த தொகையை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் 500 குடும்ப அட்டைக்கு மேல் உள்ள கடைகளுக்கு எடையாளர் நியமனம் செய்ய வேண்டும்.
ரேஷன் கடைகளில் பணியாளர்கள் முன்பு கட்டுப்பாட்டு பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story