வியாபாரியை கத்தியால் குத்தி 20 பவுன் கொள்ளை


வியாபாரியை கத்தியால் குத்தி 20 பவுன் கொள்ளை
x
தினத்தந்தி 13 Feb 2021 12:36 AM IST (Updated: 13 Feb 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

இலுப்பூரில் பட்டப்பகலில் மிக்சர் வியாபாரியை கத்தியால் குத்தி விட்டு அவரது வீட்டில் இருந்த 20 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

அன்னவாசல்,

இலுப்பூரில் பட்டப்பகலில் மிக்சர் வியாபாரியை கத்தியால் குத்தி விட்டு அவரது வீட்டில் இருந்த 20 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் விவசாயி வீட்டில் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மிக்சர் வியாபாரம்

புதுக்கோட்டை மாவட்டம்  இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 30). இவர் இலுப்பூர் பஸ் நிலையத்தில் மிக்சர் கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். நேற்று மதியம், இவரும், அவரது தாயாரும் வீட்டை திறந்து வைத்துவிட்டு மிக்சர் கடைக்கு சென்றுவிட்டனர்.
பின்னர் எண்ணெய் டின்னை எடுப்பதற்காக இருவரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது, மர்ம ஆசாமிகள் 2 பேர் வீட்டுக்குள் நின்று கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சல் போட்டனர்.

கத்தியால் குத்தி கொள்ளை


இதனையடுத்து ஆசாமிகளில் ஒருவன் ராஜசேகரின் வயிற்றில் கத்தியால் குத்தினான். தொடர்ந்து ராஜசேகரையும், அவரது தாயாரையும் வீட்டுக்குள் தள்ளி விட்டு விட்டு மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் ஏற்றி தப்பி சென்றுவிட்டனர். அந்த ஆசாமிகள் ராஜசேகரின் வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.21 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து ராஜசேகர் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மர்ம ஆசாமிகள் கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த ராஜசேகரை இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் இலுப்பூர் அருகே உள்ள எருதுபட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (31). விவசாயியான இவர் வயலுக்கு சென்று விட்டுநேற்று மதியம் வீடு திரும்பினார். அப்போது, அவரது வீட்டுக்குள் இருந்து 2 மர்மநபர்கள் வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். இதனையடுத்து அந்த ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். வெள்ளைச்சாமி வீட்டுக்குள் சென்றுபார்த்த போது, ரூ.32 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

 இது தொடர்பாக அவர் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலுப்பூர் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் பட்டப்பகலில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story