அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள். இல.கணேசன் பேட்டி
தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என இல.கணேசன் தெரிவித்தார்.
ஏர்வாடி:
‘தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள்’ என்று இல.கணேசன் கூறினார்.
தேர்தல் பிரசாரம்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தளபதிசமுத்திரத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா தனது தேர்தல் பிரசாரத்தை முறையாக தொடங்கி இருக்கிறது. தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி குறித்து ஆய்வு செய்வதற்காக மூத்த நிர்வாகிகள் அனுப்பப்பட்டு உள்ளனர்.
செல்வாக்கு
அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பதில் பா.ஜனதா உறுதியாக இருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு யார், யாருக்கு எத்தனை தொகுதிகள்?, அதில் யார் போட்டியிடுகிறார்கள்? என்பதை தெரிவிப்போம்.
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போது கட்சி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பேசுவதற்கு எந்த நேரமும் ஒதுக்கப்படவில்லை. பா.ஜனதாவின் சக்தி என்பது தேர்தலில் நாங்கள் பெற்ற வாக்குகளை வைத்து கூறிவிட முடியாது. பா.ஜனதாவுக்கு இருக்கின்ற வாக்கு சதவீதம் தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட அதிகம். மோடி பிரதமர் ஆன பிறகு அபரிமிதமான செல்வாக்கு பெருகி இருக்கிறது.
மக்கள் வாக்களிப்பார்கள்
தமிழக மக்களை பொறுத்தவரையில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்று முடிவெடுத்து வாக்களிப்பவர்கள் தான் அதிகம். தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் வாக்களிப்பவர்கள் தான் அதிகம். பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணிக்கு அனைத்து மக்களும் வாக்களிப்பார்கள். அதனால் நாங்கள் உறுதியாக வெல்வோம். சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே நடக்கும் விவகாரம் உட்கட்சி பிரச்சினை. அது பேசி தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. அவர்கள் பேசி தீர்ப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் அலுவலகம் திறப்பு
முன்னதாக, தளபதிசமுத்திரத்தில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பா.ஜனதா தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, தொகுதி பொறுப்பாளர் முத்துபலவேசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், பா.ஜனதா தேர்தல் அலுவலகத்தை திறந்து வைததார். நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story