பீரோவில் இருந்த 7 பவுன் நகை.ரூ.90ஆயிரம் திருட்டு


பீரோவில் இருந்த 7 பவுன் நகை.ரூ.90ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 12 Feb 2021 8:21 PM GMT (Updated: 12 Feb 2021 8:21 PM GMT)

மணல்மேடு அருகே நூதன முறையில் மூதாட்டியை ஏமாற்றி வீ்ட்டுக்குள் பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.90 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம மனிதனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மணல்மேடு்:
மணல்மேடு அருகே நூதன முறையில் மூதாட்டியை ஏமாற்றி வீ்ட்டுக்குள் பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.90 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம மனிதனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 
விவசாயி
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்த ஐவநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குத்தகைவேலி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன்(வயது 45). விவசாயியான இவர், விவசாய பணிக்காக வீட்டில் இருந்து சென்றார்.
இவரது மனைவி வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் அவரது தாயார் பானுமதி(70) மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் முத்துக்குமரனின் வீட்டுக்கு வந்தார்.
7 பவுன் நகை-ரூ.90 ஆயிரம் திருட்டு
அங்கு வந்த அவர், தான் ஒரு நாட்டு வைத்தியர் எனவும், முத்துக்குமரனின் நண்பர் எனவும் பானுமதியிடம் கூறியுள்ளார். பின்னர் வீட்டில் உள்ள அனைவரையும் நலம் விசாரிப்பது போல் பேசி பானுமதியிடம் வைத்தியத்திற்கு செம்பருத்தி இலை வேண்டும் என்று கேட்டுள்ளார். 
அதனை கேட்ட பானுமதி செம்பருத்தி இலையை பறிக்க வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த மர்ம நபர் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவை திறந்து அதில் இருந்த 7 பவுன் நகைகள் மற்றும் நெல் விற்று வைத்திருந்த ரூ.90 ஆயிரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 
வலைவீச்சு
நடந்த சம்பவம் எதுவும் தெரியாமல் தோட்டத்தில் இருந்து செம்பருத்தி இலையுடன் பானுமதி வந்துள்ளார். வீட்டின் உள்ளே வந்த பானுமதி பூட்டி இருந்த பீரோ திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது மகன் முத்துக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 
இதனையடுத்து உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்த முத்துக்குமரன்  நகை மற்றும் பணம் திருடப்பட்டது குறித்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நூதன முறையில் நடந்த இந்த திருட்டு குறித்து மணல்மேடு போலீஸ் நிலையத்தில் முத்துக்குமரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story