தர்மபுரியில் ரேஷன் கடை பணியாளர்கள் மறியல் போராட்டம்


தர்மபுரியில் ரேஷன் கடை பணியாளர்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2021 2:10 AM IST (Updated: 13 Feb 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகரன், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் ஜான்ஜோசப் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில பிரசார செயலாளர் சுகமதி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தொலைபேசி அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் ரேஷன் கடை பணியாளர்கள்  கலந்துகொண்டனர்.

பணி வரன்முறை செய்யப்படாத ரேஷன் கடை பணியாளர்களை பணி வரன்முறை செய்து சம வேலைக்கு சம ஊதியம் அளிக்க வேண்டும். பொதுவினியோக திட்டத்திற்கு தனி துறையை உருவாக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளுக்கு எடையாளர்களை நியமனம் செய்ய வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பணியாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்களை சேர்க்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும். வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பணியாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story