தலைவாசல் அருகே 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை


தலைவாசல் அருகே 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 13 Feb 2021 4:26 AM IST (Updated: 13 Feb 2021 4:26 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே 3 வீடுகளில் மூகமூடி கொள்ளையர்கள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அப்போது தந்தை, மகன் உள்பட 3 பேரை தாக்கி விட்டு தப்பி ஓடினர்.

தலைவாசல்:
தலைவாசல் அருகே 3 வீடுகளில் மூகமூடி கொள்ளையர்கள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அப்போது தந்தை, மகன் உள்பட 3 பேரை தாக்கி விட்டு தப்பி ஓடினர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கொள்ளை
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மெய்யநாதன் (வயது 75). இவரது மனைவி இந்திராணி (60). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மெய்யநாதன் குடு்ம்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்தூரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றிருந்தனர்.
நேற்று காலை 6 மணிக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்தபோது மெய்யநாதன் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி மெய்யநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மெய்யநாதன் குடும்பத்துடன் புறப்பட்டு வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது நேற்று முன்தினம் இரவில் இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.16 ஆயிரம் மற்றும் முக்கால் பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்தது தெரியவந்தது.
மற்றொரு வீடு
இதேபோல் மெய்யநாதன் வீட்டின் அருகில் வசிக்கும் கூலித்தொழிலாளி பச்சமுத்து, மனைவியுடன் ஆத்தூர் அருகே தளவாய்பட்டியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். இவரது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து தகவல் தெரிவித்துள்ளனர். பச்சமுத்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த முக்கால் பவுன் நகை, ரூ.400 கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
விவசாயி 
அதே ஊரைச் சேர்ந்தவர் விவசாயி கணேசன் (50). இவர் குடும்பத்துடன் அருகிலுள்ள கான்கிரீட் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.  காலையில் எழுந்து பார்த்தபோது அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டின் கதவின் பூட்டு உடைந்து கிடந்தது. வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம், ஒரு வாட்ச் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.
3 முகமூடி கொள்ளையர்கள்
இதற்கிடையே கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டபோது அதே பகுதியை சேர்ந்த வாசுதேவன் மகன் அரவிந்தன் (24) என்பவர் அந்த கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பினார். 
வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்று கேட்டை உள்பக்கமாக பூட்ட முயன்றபோது அங்கு பதுங்கி இருந்த 3 முகமூடி கொள்ளையர்கள் அரவிந்தனை தாக்கினர். அவரது சத்தம் கேட்டதும் தூங்கிக்கொண்டிருந்த தந்தை வாசுதேவன் (50) எழுந்து ஓடி வந்தார். அவரையும் தாக்கினர்.
கொல்ல முயற்சி
வாசுதேவன், அரவிந்தன் இருவரையும் போர்வையால் போர்த்தி இரும்பு கம்பியால் கொள்ளையர்கள் தாக்கி உள்ளனர். இதில் 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருவரையும் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்யவும் முயன்று உள்ளனர். பின்னர் அரவிந்தன் தாய் பொன்மொழியையும் தாக்கினர்.
இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை கண்ட கொள்ளையர்கள் அருகிலுள்ள விவசாய தோட்டத்தில் ஓடினர். ஆனால் பொதுமக்கள் விரட்டிச்சென்றனர். அப்போது விவசாயி ஆறுமுகம் (55) என்பவரின் கைகளிலும், நெஞ்சிலும் கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் விவசாயி ஆறுமுகம் காயம் அடைந்தார். கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த அரவிந்தன் தலைவாசல் அருகே ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர்கள் தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். முகமூடிக் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட வாசுதேவன், அரவிந்தன் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆத்தூர் துணை சூப்பிரண்டு  இம்மானுவேல் ஞானசேகரன், தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story