ஆபரேசன் ஸ்மைல் திட்டத்தில் மேலும் 11 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
சேலம் மாவட்டத்தில் ஆபரேசன் ஸ்மைல் திட்டத்தில் மேலும் 11 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் ஆபரேசன் ஸ்மைல் திட்டத்தில் மேலும் 11 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆபரேசன் ஸ்மைல் திட்டம்
நாடு முழுவதும் குழந்தை தொழிலாளர்களை மீட்க ஆபரேசன் ஸ்மைல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர்களை மீட்க போலீசாருக்கு தமிழக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்டம் தோறும் சென்று போலீஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினார்.
சேலம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் மற்றும் கூடுதல் சூப்பிரண்டு பாஸ்கரன் மேற்பார்வையில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிர கள ஆய்வில் ஈடுபட்டு ஒர்க்ஷாப், தொழிற்சாலைகள், தறிக்கூடங்கள், வெள்ளிப்பட்டறைகள், ஓட்டல்கள், பேக்கரி போன்றவற்றில் பணியாற்றி வரும் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து மீட்டு வருகின்றனர்.
11 குழந்தை தொழிலாளர்கள்
அதன்படி, சேலம் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் மட்டும் 70 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஆபரேசன் ஸ்மைல் திட்டத்தில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் மேலும் 11 குழந்தை தொழிலாளர்களை போலீசார் மீட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தம்பதி தங்களது மகன் மாயமாகிவிட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.
இந்தநிலையில், மீட்கப்பட்ட 11 பேரில் மாயமான அந்த தம்பதியின் மகனும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை அவனது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் 10 குழந்தை தொழிலாளர்கள் சேலத்தில் உள்ள தொண்டு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story