சேலத்தில் ஆட்டோ டிரைவர்கள் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் ஆட்டோ டிரைவர்கள் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் ஆட்டோ டிரைவர்கள் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆட்டோ டிரைவர்கள்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து சோசலிச தொழிலாளர் மையம், சேலம் ஆட்டோ தொழிலாளர் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் பொன்.சரவணன் தலைமை தாங்கினார்.
இதில் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆட்டோ டிரைவர்கள் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு இருந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் வரை ஆட்டோவை கயிற்றால் கட்டி இழுத்து வந்தனர். இதையடுத்து அவர்கள் கையில் திருவோடு ஏந்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், அதன் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
தலையில் மண்ணை போட்டனர்
இதனிடையே ஆர்ப்பாட்டத்தின் போது கைகளில் வைத்திருந்த மண்ணை தலையில் போட்டு கொண்டு கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சோசலிச தொழிலாளர் மையத்தின் மாநில அமைப்பாளர் கே.டி.ராஜ், செயலாளர் மாரியப்பன் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறும் போது, ‘அண்டை நாடுகளில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை குறைவாக தான் உள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. இதன் காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பயணிகள் ஆட்டோவுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல், கியாஸ் வழங்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story