வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர்கள் ‘திடீர்’ போராட்டம்


வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர்கள் ‘திடீர்’ போராட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2021 6:23 PM IST (Updated: 13 Feb 2021 6:23 PM IST)
t-max-icont-min-icon

அரியர் தேர்வுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர்கள் திடீரென கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

அரியர் தேர்வுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர்கள் திடீரென கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரீசு கல்லூரி

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த கல்வி ஆண்டில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவில்லை. கட்டணம் செலுத்திய மாணவர்களும், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

தற்பொழுது அந்த அறிவிப்பு செல்லாது என்றும், மாணவர்கள் கட்டாயம் தேர்வு எழுத வேண்டும் என திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து வேலூர் ஊரீசு கல்லூரி நிர்வாகம் அரியர் தேர்வுக்கு பணம் கட்டுமாறு மாணவர்களிடையே தெரிவித்தனர்.

இதனால் இக்கல்வி ஆண்டில் படித்து வரும் மாணவர்களின் அரியர் வைத்தவர்களும், 3-ம் ஆண்டு முடித்து சென்ற மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

திடீர் போராட்டம்

இதையடுத்து கல்லூரி முன்பு மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த முடியாது என அவர்கள் கூறினர்.

இதையடுத்து வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார், கல்லூரி நிர்வாகத்தினர் வந்து மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தங்கள் கோரிக்கை குறித்து பல்கலைக்கழகத்தில் மனுவாக கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக போராட்டம் செய்வது வீண் என போலீசார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். 

பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், 3-ம் ஆண்டு முடித்த மாணவர்களில் அரியர் தேர்வுக்கு பணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 

எனவே மாணவர்கள் பலர் உயர்கல்வி பயின்று வருகின்றனர். தற்போது இவ்வாறு தெரிவிப்பதால் உயர்கல்வி பயில்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கட்டணம் செலுத்திவிட்டோம். தேர்ச்சி செய்தற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுவிட்டது.

 ஆனால் மீண்டும் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத வேண்டும் என்று கூறுகின்றனர். இதை எதிர்த்து போராட்டம் செய்தோம் என்றனர்.

மீண்டும் கட்டணம் வசூல்

கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில், ஏற்கனவே அரியர் தேர்வுக்காக மாணவர்கள் கட்டணம் செலுத்தினர். ஆனால் தேர்ச்சி என அரசு அறிவித்தது. தற்போது மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என கூறுகின்றனர். 

ஏற்கனவே மாணவர்கள் செலுத்திய கட்டணம் அந்த தேர்வு ஏற்பாடுகளுக்கு செலவாகி விட்டதாக கூறப்படுகிறது. 

தற்போது மீண்டும் தேர்வு நடத்துவதற்கு பணம் தேவைப்படுவதால் கட்டணம் வசூலிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Next Story