2-ம் முறையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது


2-ம் முறையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 13 Feb 2021 10:34 PM IST (Updated: 13 Feb 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 2வது முறையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

விழுப்புரம், 

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக பதிவு செய்த சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இப்பணி தொடங்கப்பட்ட ஆரம்பத்தில் 4 மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்தது. பின்னர் தடுப்பூசி மையங்களை சுகாதாரத்துறை அதிகரித்தது. அதன்பேரில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனை (கொரோனா சிறப்பு மருத்துவமனை) மற்றும் செஞ்சி, கண்டமங்கலம், காணை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வல்லம், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 13 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் என 15 மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது. இருந்தபோதிலும் கொரோனா தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் மத்திய அரசின் அறிவுரைப்படி வருவாய்த்துறையினர், காவல்துறையினர் ஆகியோருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். இப்பணி தொடங்கப்பட்டு நேற்று முன்தினம் வரை 5,527 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

2-வது முறையாக தடுப்பூசி

இதனிடையே முதல் முறை கொரோனா தடுப்பூசி போட்டு 28 நாட்கள் கழித்து 2-வது முறையாக அதே தடுப்பூசியை போட வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. அந்த வகையில் 2-ம் முறையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இப்பணி விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கண்ட 15 மையங்களிலும் நடந்தது. இதற்காக முதல் முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் செல்போனுக்கு கோவின் என்ற செயலி மூலம் தடுப்பூசி போடும் நேரம் குறித்த தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவலாக அனுப்பப்பட்டது. அதன்படி ஏற்கனவே முதல் முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நேற்று அந்தந்த மையங்களுக்கு சென்று 2-வது முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சுமார் அரை மணி நேரம் அந்தந்த மையங்களிலேயே அமர வைக்கப்பட்டு அவர்களை மருத்துவ குழுவினர் கண்காணித்தனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர்.

அச்சமின்றி போட வேண்டும்

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே முதல் முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 28 நாட்கள் கழித்து தற்போது 2-ம் முறை அதே தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. கொரோனா தடுப்பூசி போட வேண்டியதன் அவசியம் மற்றும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை முன்களப்பணியாளர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அரசு உயர் அதிகாரிகளும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அச்சமின்றி தாமாக முன்வந்து இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டு கொரோனா நோயில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றனர்.

Next Story