சுகாதார பணிகளில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திட வேண்டும்
சுகாதார பணிகளில் மக்களின் எதிர்பார்ப்பை சுகாதார பணியாளர்கள் பூர்த்தி செய்திட வேண்டும் என்று கலெக்டா் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- மக்கள் நலவாழ்வு மன்ற கூட்டமானது தமிழகத்தில் புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை மற்றும் கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கிராம மக்களிடம் கலந்தாலோசித்து அக்கிராமத்தில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளை கண்டறிந்து, சுகாதாரம் மற்றும் சுகாதார திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சுகாதார பணிகளில் மக்களின் தேவையை அறிந்து, அவர்களது எதிர்பார்ப்பை சுகாதார பணியாளர்கள் பூர்த்தி செய்திட வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கிராமங்களில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து தற்காலிக தீர்வுக்கு உட்படுத்த வேண்டும்.
நடவடிக்கை
அரசின் செயல்பாடுகளை நிரந்தரமாக அவ்விடங்களில் செயல்படுத்திட நலவாழ்வு மன்ற உறுப்பினர் அனைவரையும் முழுமையாக ஈடுபடுத்தி, இத்திட்டத்தினை செயல்படுத்திட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இத்திட்டங்களின் செயல்பாடுகளை வெளிநபர்களை கொண்டு ஆய்வு செய்திட வேண்டும்.
மக்களுக்காக அரசு ஏற்படுத்தியுள்ள சுகாதார திட்டங்களை, மக்களுக்கு முழுமையாக தெரியப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுகாதார திட்டங்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு பகுதிகளுக்கு ஏற்ப மக்களுக்குள்ள சுகாதார பிரச்சினைகளை கண்டறிந்து, அதற்குண்டான தீர்வுகளையும் செய்திட வேண்டும். இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story