கன்னியாகுமரியில் காந்தியின் அஸ்தி கரைத்த 74-வது நினைவு நாள்
கன்னியாகுமரி கடலில் காந்தியின் அஸ்தி கரைத்த 74-வது ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. சர்வோதய சங்க பெண்கள் ராட்டையில் நூல் நூற்கும் நூற்பு வேள்வி நடத்தினர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி கடலில் காந்தியின் அஸ்தி கரைத்த 74-வது ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. சர்வோதய சங்க பெண்கள் ராட்டையில் நூல் நூற்கும் நூற்பு வேள்வி நடத்தினர்.
அஸ்தி கரைப்பு
மகாத்மா காந்தி 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி டெல்லியில் பிரார்த்தனை கூட்டத்துக்கு செல்லும்போது கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டு, அஸ்தி பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அதில் ஒரு அஸ்தி கலசம் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கன்னியாகுமரிக்கு எடுத்து வரப்பட்டு முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் கரைக்கப்பட்டது.
முன்னதாக அவரது அஸ்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் வைக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் காந்தி நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.
74-வது நினைவு நாள்
காந்தியின் அஸ்தி கரைத்த 74-வது ஆண்டு நினைவு நாளையொட்டி குமரி மாவட்ட சர்வோதய சங்கம் சார்பில் ‘சர்வோதய மேளா’ நிகழ்ச்சி காந்தி நினைவு மண்டபத்தில் நடந்தது. அத்துடன் காந்தி நினைவு நாளான கடந்த மாதம் (ஜனவரி) 30-ந்தேதி முதல் பெண்கள் நடத்தி வந்த ராட்டையில் நூல்நூற்கும் தொடர் நூற்பு வேள்வியின் நிறைவு நாள் நிகழ்ச்சியும் நடந்தது.
மாவட்ட சர்வோதய சங்க தலைவர் சந்தானம்பிள்ளை தலைமை தாங்கினார். செயலாளர் மனோகரன், பொருளாளர் சாந்தி இமாகுலேட் பிர்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சர்வமத கூட்டு பிரார்த்தனையும், பஜனையும் நடந்தது. இறுதியாக தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டன. இதில் குமரி மாவட்டத்திலுள்ள சர்வோதய சங்கத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் மற்றும் தியாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story