மாவட்ட வருவாய் அதிகாரி, துணை கலெக்டர்களுக்கு கொரோனா தடுப்பூசி
நாகர்கோவிலில் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் துணை கலெக்டர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 28 நாள் முடிந்தவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் துணை கலெக்டர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 28 நாள் முடிந்தவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, குழித்துறை அரசு மருத்துவமனை, செண்பகராமன்புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் இந்த தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
14 மையங்கள்
பின்னர் செண்பகராமன்புதூரைத் தவிர மேலும் 8 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நாகர்கோவில் மாநகராட்சியில் வடிவீஸ்வரம், வடசேரி ஆகிய 2 நகர்நல மையங்களிலும் என 10 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி அதிகரிக்கப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
இவற்றில் நேற்று முன்தினம் வரை 3503 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த ஊசி போட்டு 28 நாள் முடிவடைந்தவர்கள் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதன்படி கடந்த மாதம் 16-ந் தேதி அன்று கொரோனா தடுப்பூசி போட்டு 28 நாள் முடிவடைந்த டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு நேற்று 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
மாவட்ட வருவாய் அதிகாரி
மேலும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக போலீசார் நேற்று வந்திருந்தனர். இதேபோல் மற்ற மையங்களிலும் போலீசாரும், அரசுத்துறையின் முன்கள பணியாளர்கள் நேற்று முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள சென்றிருந்தனர்.
நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள மாநகராட்சி நகர்நல மையத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், துணை கலெக்டர்கள் திருப்பதி, நாகராஜன், சங்கரலிங்கம் ஆகியோர் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 16 ஆயிரத்து 466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 ஆயிரத்து 56 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 322 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story