லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது; வாலிபருக்கு தீவிர சிகிச்சை
லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பெரம்பலூர்:
மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா சீராநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜ்குமார்(வயது 31). இவர் நேற்று மாலை பெரம்பலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் அரியலூர் சாலையில் கவுள்பாளையம் அருகே சென்றார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் ராஜ்குமார் படுகாயமடைந்தார். மேலும் மோட்டார் சைக்கிள் திடீரென்று தீப்பற்றி எரிந்ததில், ராஜ்குமார் மீதும் தீப்பற்றியது. மேலும் லாரியின் முன்பக்கமும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்ட லாரியின் டிரைவரான அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா சாத்தனபட்டு கிழக்கு தெருவை சேர்ந்த தேவரின் மகன் வீரபாண்டியன் (23) உடனடியாக, லாரியில் இருந்து குதித்தார். மேலும் அவர் ராஜ்குமாரை மீட்டு, அவர் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றார்.
பெரும் விபத்து தவிர்ப்பு
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து மோட்டார் சைக்கிள், லாரி மற்றும் ராஜ்குமார் ஆகியோரின் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து ராஜ்குமார் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜ்குமார் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீப்பிடித்ததில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமாகி எலும்புக்கூடு போல் காட்சியளித்தது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story