மாநில அளவிலான ஜூனியர் கபடி போட்டியில் பங்கேற்க பெரம்பலூர் மாவட்ட அணிக்கு 30 வீரர்- வீராங்கனைகள் தேர்வு


மாநில அளவிலான ஜூனியர் கபடி போட்டியில் பங்கேற்க பெரம்பலூர் மாவட்ட அணிக்கு 30 வீரர்- வீராங்கனைகள் தேர்வு
x
தினத்தந்தி 13 Feb 2021 7:20 PM GMT (Updated: 13 Feb 2021 7:20 PM GMT)

மாநில அளவிலான ஜூனியர் கபடி போட்டியில் பங்கேற்க பெரம்பலூர் மாவட்ட அணிக்கு 30 வீரர்- வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்:
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 47-வது மாநில அளவிலான சிறுவர்களுக்கான (ஜூனியர்) கபடி போட்டி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சோனைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதேபோல் சிறுமிகளுக்கான (ஜூனியர்) கபடி போட்டி சென்னை ராணிமேரி கல்லூரியில் வருகிற 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இப்போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட அணிக்காக விளையாடும் வீரர்-வீராங்கனைகள் தேர்வு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. தேர்வு போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட அமெச்சூர் கபடிக்குழு தலைவர் முகுந்தன் தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் பங்கேற்க பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 20 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகள் ஏராளமானோர் வந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் கபடி தேர்வு போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். தகுதியின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட சிறுவர்கள் அணிக்கு 15 வீரர்களும், சிறுமிகள் அணிக்கு 15 வீராங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் மாநில அளவில் நடைபெறும் ஜூனியர் கபடி போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட அமெச்சூர் கபடிக்குழுவின் மாவட்ட செயலாளர் ரமேஷ், துணைச் செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story