அந்தியூர் அருகே கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்தது- பொதுமக்கள் பீதி


அந்தியூர் அருகே கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்தது- பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 14 Feb 2021 12:57 AM IST (Updated: 14 Feb 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தார்கள்.

அந்தியூர்,

அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் அணை அருகே நல்லாகவுண்டன் கொட்டாய் கிராமம் உள்ளது. இங்குள்ளவர்களில் பலர் விவசாயிகள். ஆடு, மாடு வளர்த்து வருகிறார்கள். இதே ஊரைச்சேர்ந்தவர் மாணிக்கம். விவசாயி. இவருடைய மகன் திவாகர் (23). ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். 

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் திவாகர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது வெளியே நாய்கள் குரைக்கும் சத்தம் அதிக அளவில் கேட்டது. இதனால் அவர் வெளியே வந்து பார்த்தார்.   

அப்போது வீட்டுக்கு வெளியே அந்தியூர்-பர்கூர் ரோட்டில் சிறுத்தை ஒன்று பாய்ந்து ஓடுவதை கண்டார். இதனால் பயந்துபோன அவர் வீட்டுக்குள் ஓடிவந்துவிட்டார். பின்னர் தன்னுடைய வீட்டில் இருப்பவர்களிடமும், உறவினர்களிடமும் இதுபற்றி கூறினார். 

உடனே அந்த பகுதியில் வசிக்கும் சிலர் தங்களுடைய வீட்டின் முன்பகுதியில் பொருத்தியிருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார்கள்.
 அப்போது சிறுத்தை ரோட்டில் ஓடியது தெரிந்தது. ஆடு, மாடுகளை தேடி சிறுத்தை வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதியை விட்டு வெளியேறி நல்லாகவுண்டன் கொட்டாய் கிராமத்துக்குள் புகுந்து இருப்பது தெரிய வந்தது. 

ஆடு, மாடுகளை வேட்டையாட வந்த சிறுத்தை நாய்கள் ஒன்று சேர்ந்து குரைத்ததால் மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக நல்லாகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் சிறுத்தை நடமாடுவதை சிலர் பார்த்துள்ளார்கள். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சிறுத்தை வந்து செல்வது அவர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. 
எனவே அந்தியூர் வனத்துறை அதிகாரிகள் நல்லாகவுண்டன் கொட்டாய் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Next Story