கவுந்தப்பாடி அருகே தொழில் அதிபரை காரில் கடத்திய 4 பேர் கைது; 5 பேருக்கு வலைவீச்சு


கவுந்தப்பாடி அருகே தொழில் அதிபரை காரில் கடத்திய 4 பேர் கைது; 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Feb 2021 1:11 AM IST (Updated: 14 Feb 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

கவுந்தப்பாடி அருகே தொழில் அதிபரை காரில் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தார்கள். மேலும் 5 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கவுந்தப்பாடி,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள எல்.எம்.பாலப்பாளையத்தை ‍சேர்ந்தவர் சாமுவேல் சுரேன் (வயது 35). இவருடைய மனைவி நர்மதா. மகள் திவேனா கேத்ரின் (6). சாமுவேல் சுரேன் ஆன்லைன் பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் அதிக லாபம் பெற்று தருவதாக கூறி அவர் சிலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று இருப்பதாக தெரிகிறது. ஆனால் பணம் பெற்றவர்களிடம் முறையாக அவர் திருப்பி தராததால் பணம் கொடுத்தவர்கள் நாள்தோறும் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு வற்புறுத்தி வந்தார்கள். இதனால் சாமுவேல் சுரேன் கோபி ஜெ.ஜெ.நகருக்கு குடிவந்தார். 

இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி வெளியே சென்ற சாமுவேல் சுரேன் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பயந்துபோன நர்மதா கவுந்தப்பாடி போலீசில் கணவரை காணவில்லை. அவரை யாராவது கடத்தி சென்று இருக்கலாம். மீட்டு தாருங்கள் என்று புகார் அளித்தார். 
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சாமுவேல் சுரேனிடம் பணம் கொடுத்த சிலர் கார்களில் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனால் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினார்கள். 

இதற்கிடையே நேற்று மாலை கவுந்தப்பாடி காஞ்சிக்கோவில் பிரிவு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது 2 கார்கள் வேகமாக வந்தன. இதனால் சந்தேகத்தின் பேரில் போலீசார் 2 கார்களையும் நிறுத்தி சோதனை செய்தார்கள். 

அப்போது காருக்குள் கடத்தப்பட்ட சாமுவேல் சுரேன் இருந்தார். காருக்குள் இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் அவரை கீழே தள்ளிவிட்டு மீண்டும் காரில் செல்ல முயன்றார்கள். உடனே போலீசார் அவர்களை கூற்றிவளைத்து பிடித்தார்கள். அப்போது 5 பேர் தப்பி ஓடிவிட்டார்கள். 

பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, அவர்கள் சென்னிமலை பிடாரியூரை சேர்ந்த  ஈஸ்வரமூர்த்தி (39), அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்கிற சுப்பிரமணியம் (36), விஜயமங்கலம் சேரன் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் (47), விஜயமங்கலம் பகலாயூரை சேர்ந்த பிரபாகரன் (40) என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். 

மேலும் தப்பி ஓடியவர்கள் பவானியை சேர்ந்த சிவராஜா, ஸ்ரீதரன், விஜயமங்கலத்தை சேர்ந்த வெங்கடேசன், சென்னிமலையை சேர்ந்த வெங்கடேஷ்குமார் மற்றும் மோகன் என்கிற சந்திரமோகன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

கைதான 4 பேரும் போலீசாரிடம் கூறும்போது, தாங்கள் சாமுவேல் சுரேனிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், அவர் திருப்பி தராமல் ஏமாற்றியதாகவும், அதனால் ஏமாந்த அனைவரும் சேர்ந்து சாமுவேல் சுரேனை காரில் கடத்தியதாகவும் கூறினார்கள்.

 சாமுவேல் சுரேனை கடத்தியவர்கள் அவரை ஆசனூர், சென்னிமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் அடைத்துவைத்து துன்புறுத்தியுள்ளார்கள். அதனால் அவருடைய உடலில் காயங்களும் உள்ளன. தற்போது அவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் கவுந்தப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story