உடல்நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 64 போலீசார் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு


உடல்நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 64 போலீசார் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 14 Feb 2021 6:03 AM GMT (Updated: 14 Feb 2021 6:03 AM GMT)

உடல்நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 64 போலீசார் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை,

சென்னை பெருநகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கி.ராஜூ, தலைமைக் காவலர்களாக பணிபுரிந்து வந்த பெ.செந்தில்குமார் மற்றும் எஸ்.சுதாகர், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ப.ராபர்ட், சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த வே.அமுதன், புளியந்தோப்பு போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த க.யுவராஜ், ஆயுதப்படை ‘‘ஈ’’ நிறுமம், 19-ம் அணியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த க.அன்பரசன், திருமுல்லைவாயல் காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த அ.புருஷோத்தமன், எஸ்.ஆர்.எம்.சி. போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ப.அசோக்.

கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த சுதா, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ப.சரவணகுமார், புழல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த கலியமூர்த்தி, அடையாறு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ம.துரைராஜ், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த பா.முருகன் உள்பட 47 போ் உடல்நலக்குறைவால் காலமானார்கள்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம், சட்ராஸ் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ந.தணிகைவேல், சென்னை பெருநகர காவல், மாதவரம் ஜி.என்.டி. சாலைப் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ரா.தேசிங்கு, பரங்கிமலை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்த பிரதாப் உள்பட 17 பேர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர். உடல்நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்த 64 போலீசாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story