உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று நாகை வருகை


உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று நாகை வருகை
x
தினத்தந்தி 14 Feb 2021 6:04 AM GMT (Updated: 14 Feb 2021 6:04 AM GMT)

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாகைக்கு மு.க.ஸ்டாலின் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வருகிறார்.

நாகப்பட்டினம்,

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று பேசி வருகிறார்.

இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.இதில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி, திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கின்றனர்.

சிறப்பான வரவேற்பு

இதை தொடர்ந்து மதியம் நாகை மாவட்டம் சார்பில் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரத்தில் வேளாங்கண்ணி-வேதாரண்யம் பிரிவு சாலையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாஞ்சூர் ரவுண்டானாவிற்கு மதியம் 1 மணிக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதை தொடர்ந்து நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்கிறார். இதில் திரளான பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொள்கின்றனர்.

Next Story