திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைசேர்ந்த 4 பேர் பலி


திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைசேர்ந்த 4 பேர் பலி
x
தினத்தந்தி 14 Feb 2021 11:36 AM GMT (Updated: 14 Feb 2021 11:36 AM GMT)

திருவண்ணாமலை அருகே அரசுபஸ்மீது கார்மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைசேர்ந்த 4 பேர் பலியானார்கள்.

திருவண்ணாமலை

சொந்த ஊருக்கு சென்றனர்

திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்நகரை சேர்ந்தவர் ஸ்ரீபால் (42). இவரது மனைவி பத்மபிரியா (36). இவர்களுக்கு ஆரியா (12) என்ற மகனும், மிருதுளா (8) என்ற மகளும் உள்ளனர். பத்மபிரியாவின் தந்தை சதீஷ்குமார் (68), இவரது மனைவி சாந்தி (60). சதீஷ்குமார் சென்னை மாதவரம் கன்னியப்பன் தெருவை சேர்ந்தவர். சொந்தமாக லாரிவைத்து தொழில் செய்து வந்தார்.
 ஸ்ரீபால் சென்னையில் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் முதன்மைமேலாளராக பண்ிபுரிந்து வந்தார். இதனால் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீபால், தனது மனைவி, குழந்தைகள், மாமனார், மாமியாருடன் நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். கார் திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி அருகே வந்து கொண்டிருந்தது.

பஸ்மீது மோதல்

அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் ஸ்ரீபால், அவரது மனைவி பத்மபிரியா மற்றும் சாந்தி ஆகியோர் கார் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் ஆரியா, மிருதுளா மற்றும் அவர்களது தாத்தா சதீஷ்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

பஸ் கவிழ்ந்தது

இந்த நேரத்தில் வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி மற்றொரு காரில் வந்தவர்கள் விபத்து ஏற்பட்டதை கண்டு 100 மீட்டருக்கு முன்பே அதன் டிரைவர் காரை நிறுத்தி உள்ளார். விபத்துக்குள்ளான அரசு பஸ்சை டிரைவர் நிறுத்த முயன்று உள்ளார். ஆனால் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி 100 மீட்டர்தூரத்தில் நின்று கொண்டிருந்த கார்  மீது மோதிவிட்டு, பின்னர் சாலையோரம் உள்ள சிறிய பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இதில் அந்த காரின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டது. அதில் வந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். அதேபோன்று பஸ்சில் 50 பயணிகள் இருந்துள்ளனர். அவர்கள் லேசான காயத்துடன் தப்பினர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் காரில் சிக்கி உயிரிழந்த ஸ்ரீபால், சாந்தி, பிரியா ஆகிய 3 பேரின் உடலையும் போலீசார் பொக்லைன் எந்திரம்மூலம் மீட்டு பிரேத பரிேசாதனைக்காக திருவண்ணாமலை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 படுகாயம் அடைந்த சதீஷ்குமார் மற்றும் குழந்தைகள் ஆரியா, மிருதுளா ஆகிய 3 ேபரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் சதீஷ்குமார் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைகள் ஆரியா மற்றும் மிருதுளாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் அரசு பஸ்சில் பயணம் செய்த பயணிகளில் காயம் அடைந்தவர்களும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து அறிந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். போலீசார் அவர்களை கலைத்தனர். 

இந்த விபத்து காரணமாக திருவண்ணாமலை-வேலூர் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story