ஒயிட் டவுண் பகுதியில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு; ‘தடுப்பு கட்டைகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை’


ஒயிட் டவுண் பகுதியில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு; ‘தடுப்பு கட்டைகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை’
x
தினத்தந்தி 14 Feb 2021 2:49 PM GMT (Updated: 14 Feb 2021 2:49 PM GMT)

ஒயிட் டவுண் பகுதியில் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் நாராயணசாமி 2 நாளில் தடுப்புக்கட்டைகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தார்.

3 அடுக்கு பாதுகாப்பு
புதுவையில் கவர்னர் மாளிகைக்கும், அமைச்சரவைக்கும் தீராத மோதல் இருந்து வருகிறது. தற்போதுள்ள சட்டசபையின் பதவிகாலம் நிறைவடைய உள்ள நிலையில் இது உச்சகட்டத்தை எட்டியது. இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து துணை ராணுவம் வரவழைக்கப்பட்டு கவர்னர் மாளிகையை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

இதுதவிர தலைமை தபால் நிலையம், அரவிந்தர் ஆசிரமம் மணக்குள விநாயகர் கோவில், தலைமை செயலகம், சட்டசபை, கடற்கரை பகுதிகளில் தடுப்புக் கட்டைகள் அமைத்து தீவிர பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கையால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். குறிப்பாக ஒயிட் டவுண் பகுதியில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் கெடுபிடி காட்டியதால் பொதுமக்கள் அதிருப்திக்குள்ளானார்கள். இதுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.

நேரில் ஆய்வு
இந்தநிலையில் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவாக இருக்கும் தடுப்புக் கட்டைகளை அகற்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். இதன்பின் குறிப்பிட்ட பகுதிகளில் கெடுபிடிகள் குறைந்தனவே தவிர தடுப்புகள் அகற்றப்படவில்லை.

இதுபற்றி அறிந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி தடுப்புகளை அகற்றும் விதமாக தானே நேரில் நேற்று மதியம் ஆய்வு செய்தார். சபாநாயகர் சிவக்கொழுந்து போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன், கலெக்டர் பூர்வா கார்க், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா, போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் ஆகியோருடன் தடுப்பு அமைத்துள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார்.

அகற்ற உத்தரவு
அப்போது பொதுமக்களின் நடமாட்டத்துக்கு இடையூறாக இருக்கும் தடுப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் மாளிகை, சட்டசபை, தலைமை செயலகம் மற்றும் எனது வீடு அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் எனது வீடு அருகே தடுப்புகள் அமைப்பதை நான் ஏற்கவில்லை. அதே நேரத்தில் கவர்னர் மாளிகை, தலைமை செயலகம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், சட்டமன்றம் ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இதனால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கடுமையாக அவதியடைந்தனர். எனவே மக்களுக்கு இடை யூறாக உள்ள தடுப்புகளை அகற்ற கடந்த 15 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டேன்.

மாற்று கருத்து இல்லை
அதைத்தொடர்ந்து ஒரு சில தடுப்புகள் மட்டும் அகற் றப்பட்டன. இது தொடர்பாக கலெக்டரிடம் கேட்டபோது கடந்த 8-ந்தேதியே அகற்ற உத்தரவிட்டதாகவும், போலீசார் அவற்றை அகற்றவில்லை என்றும் கூறினார். எனவே சபாநாயகர், போலீஸ் ஏ.டி.ஜி.பி., கலெக்டர் ஆகியோருடன் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டேன்.அப்போது சட்டசபை, தலைமை தபால் நிலையம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், ரோமண்ரோலன்ட் நூலக பகுதிகளில் உள்ள தடுப்புகளை உடனடியாக அகற்ற கூறினேன்.

கவர்னருக்கு பாதுகாப்பு தருவதில் மாற்று கருத்து இல்லை. கவர்னர் மாளிகையை சுற்றிலும் பாதுகாப்பு போட்டுக் கொள்ளட்டும். மற்ற பகுதிகளில் உள்ள தடுப்புகளை உடனடியாக அகற்றவேண்டும். மக்களுக்காகத்தான் எங்கள் அரசு உள்ளது. தடுப்புகளை 2 நாட்களுக்குள் அகற்றாவிட்டால் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story