பிரான்மலை குளத்தில் ‘டைவ்’ அடித்து குளிக்கும் சிறுவர்கள்


பிரான்மலை குளத்தில் ‘டைவ்’ அடித்து குளிக்கும் சிறுவர்கள்
x
தினத்தந்தி 14 Feb 2021 6:03 PM GMT (Updated: 14 Feb 2021 6:03 PM GMT)

கடந்த மாதத்தில் சிவங்கை மாவட்டத்தில் நீரில் மூழ்கி 11 பேர் இறந்து விட்டனர். இந்த நிலையில் பிரான்மலை குளத்தில் சிறுவர்கள் டைவ் அடித்து குளித்தனர். அவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

சிங்கம்புணரி,

கடந்த மாதத்தில் சிவங்கை மாவட்டத்தில் நீரில் மூழ்கி 11 பேர் இறந்து விட்டனர். இந்த நிலையில் பிரான்மலை குளத்தில் சிறுவர்கள் டைவ் அடித்து குளித்தனர். அவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

குடிமராமத்து பணி

தமிழகத்தில் கடந்த ஆண்டு குடிமராமத்து பணி நடைபெற்றது.இதில் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், குட்டைகள் தூர்வாரப்பட்டன. அதன்பிறகு டிசம்பர்,ஜனவரி மாதங்களில் பருவம் தவறி பெய்த மழையால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பின.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான நீர்நிலைகள் புயல் மழையால் நிரம்பின. பருவம் தவறி பெய்த இந்த மழையால் அறுவடைக்கு தயாரான நெல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

11 பேர் பலி

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு குளம், கண்மாய்கள் நிரம்பியதால் சிறுவர்-சிறுமிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் அந்த குளம், கண்மாய்களுக்கு சென்று குளித்தனர். இதில் நீச்சல் தெரியாததால் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 11 சிறுவர்-சிறுமிகள் நீரில் மூழ்கி பலியாகி விட்டனர் என்பது வேதனையான விஷயம். இதை தொடர்ந்து சிறுவர், சிறுமிகளை பெற்றோர் தங்கள் கண்காணிப்பில் வைத்து இருக்க வேண்டும். நீர்நிலைகளுக்கு தனியாக குளிப்பதற்கு அனுப்பக்கூடாது என தீயணைப்புத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் கேட்டு கொண்டது.

 சிறுவர்கள் உற்சாக குளியல்

இந்த நிலையில் சி்ங்கம்புணரி அருகே பிரான்மலை பக்கம் உள்ள பிடாரி அம்மன் கோவில் குளம் தற்போது நீர்நிரம்பி காணப்படுகிறது. சமீபத்தில் அது தூர்வாரப்பட்டு இருந்ததால் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. பிரான்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் இங்கு வந்து உற்சாகத்துடன் டைவ் அடித்து குளத்தில் குதித்து குளித்து வருகின்றனர். குளம் பராமரிக்கப்பட்டு இருப்பதால் சிறுவர்களின் உற்சாக குளியல் விபரீதமாகி விட கூடாதே என அவர்கள் டைவ் அடித்து குளிப்பதை பார்ப்பவர்கள் மனம் பதை, பதைக்கிறார்கள். சிறுவர்களும் எதையும் கண்டு கொள்ளாமல் டைவ் அடித்து குளத்தில் குதித்து மகிழ்ந்தனர்.

கண்காணிக்க வேண்டும்

இது குறித்து பிரான்மலை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன் கூறும் போது, இன்றைய சிறுவர், சிறுமிகளுக்கு சரிவர நீச்சல் தெரிவதில்லை. அக்கம், பக்கத்து சிறுவர்கள் நாங்கள் எல்லாம் குளத்தில் நீச்சல் அடித்து குளித்தோம் என்று கூறியவுடன் அவர்களும் குளத்திற்கு குளிக்க வந்து விடுகின்றனர். பெற்றோர் வேலைக்கு செல்வதால் தங்கள் பிள்ளைகளை சரிவர கவனிக்க முடிவதில்லை. குளம், கண்மாய்களில் குளிக்கும் சிறுவர், சிறுமிகள் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று தங்கள் இன்னுயிரை இழந்து விடுகின்றனர். எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அதோடு குளம், குட்டைகள், கண்மாய்களில் ஆழம், புதைக்குழி போன்றவை இருந்தால் அரசு சார்பில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும். மேலும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சியை கற்று கொடுக்க வேண்டும். அப்போது தான் இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும். அதோடு நீர்நிலைகளில் குளிக்கும் போது தங்கள் பிள்ளைகளை கவனமாக பார்க்க வேண்டும் என்றார்.

Next Story