கடலூர் சில்வர் பீச்சுக்கு செல்ல காதலர்களுக்கு தடை


கடலூர் சில்வர் பீச்சுக்கு செல்ல காதலர்களுக்கு தடை
x
தினத்தந்தி 14 Feb 2021 7:43 PM GMT (Updated: 14 Feb 2021 7:43 PM GMT)

காதலர் தினமான நேற்று கடலூர் சில்வர் பீச்சுக்கு செல்ல காதலர்களுக்கு போலீசார் தடை விதித்ததோடு, அவர்களை திருப்பி அனுப்பினர்.

கடலூர், 

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காதலர்கள் சுற்றுலா தலங்கள், பூங்கா, பீச், மால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது தங்களின் காதல் நினைவாக காதலன், காதலிக்கும், காதலி, காதலனுக்கும் பிடித்த பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்தனர். குறிப்பாக காதலின் அடையாளமான ரோஜா பூ வாங்கி கொடுத்தும் மகிழ்ந்தனர்.
அதன்படி கடலூரில் காதலர் தினத்தை காதலர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ஆனால் கடலூர் சில்வர் பீச்சுக்கு செல்ல காதலர்களுக்கு போலீசார் தடை விதித்தனர். இருப்பினும் காதல் ஜோடிகள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் சில்வர் பீச்சுக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். முன்னதாக அவர்களிடம் நீங்கள் காதலர்களா? அல்லது திருமணம் ஆனவர்களா? என்பதை விசாரித்தனர்.

ஏமாற்றத்துடன் திரும்பினர்

விசாரணையில், அவர்கள் காதல் ஜோடிகள் என்றால் அவர்களை உடனடியாக செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் காதலர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை பார்க்க முடிந்தது. அதேவேளை புதுமண தம்பதிகள் காலை முதலே சில்வர் பீச்சுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் கடற்கரையில் கொளுத்தும் வெயிலையும் பாராமல் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
சிலர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். சீறி வந்த கடல் அலையில் கால்களை நனைத்தும், சிலர் குளித்தும் மகிழ்ந்தனர். மாலையில் நேரம் செல்ல, செல்ல ஏராளமானோர் குடும்பத்துடன் சில்வர் பீச்சுக்கு வரத்தொடங்கினர். அவர்களை போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகே கடற்கரைக்கு செல்ல அனுமதித்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பரிசுப்பொருட்கள்

இதேபோல் காதல் திருமணம் செய்த தம்பதிகளும் ஒருவருக்கொருவர் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். மனைவிக்கு பிடித்த பரிசுப்பொருட்களை வாங்கிக்கொடுத்து மகிழ்ந்தனர். சாக்லெட், ஐஸ்கிரீம், செயின், மோதிரம், துணிமணிகள், பொம்மைகள் என தங்கள் காதல் மனைவிக்கு, கணவருக்கு பிடித்த பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். கடலூர் நகராட்சி பூங்காவிலும் காதலர்கள் அமர்ந்து காதல் மொழி பேசி மகிழ்ந்தனர். பரிசுப்பொருட்களையும் பரிமாறினர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் காதலர் தின விழாவை காதலர்கள் மட்டுமின்றி, காதல் திருமணம் செய்தவர்கள், புதுமண தம்பதிகள், பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தவர்களும் கொண்டாடினர்.

Next Story