கடம்பூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்; மக்காச்சோள மூட்டைகள் சேதம் காவலுக்கு இருந்த விவசாயி தப்பி ஓடியபோது கீழே விழுந்து படுகாயம்


கடம்பூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்; மக்காச்சோள மூட்டைகள் சேதம் காவலுக்கு இருந்த விவசாயி தப்பி ஓடியபோது கீழே விழுந்து படுகாயம்
x
தினத்தந்தி 14 Feb 2021 8:16 PM GMT (Updated: 14 Feb 2021 8:16 PM GMT)

கடம்பூா் அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் மக்காச்சோள மூட்டைகளை சேதப்படுத்தியது. யானைக்கு பயந்து காவலுக்கு இருந்த விவசாயி தப்பி ஓடியபோது கீழே விழுந்து படுகாயம் அடைந்தாா்.

டி.என்.பாளையம்
கடம்பூரை அடுத்த கோட்டமாளம் அருகே உள்ள காடட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேவப்பா (வயது 60).விவசாயி. இவர் தன்னுடைய 6 ஏக்கர் தோட்டத்தில் மக்காச்சோளம் பயிாிட்டு இருந்தார். அதை அறுவடை செய்து மூட்டைகளாக்கி அங்குள்ள களத்தில் அடுக்கி வைத்திருந்தார். மேலும் அந்த மூட்டைகளுக்கு இரவில் மாதேவப்பா காவல் இருந்தும் வந்து உள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல் காவலுக்கு மாதேவப்பா சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 3 யானைகள் மாதேவப்பாவின் தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அந்த யானைகள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்காச்சோள மூட்டைகளை மிதித்து சேதப்படுத்தியது.
யானைகளை கண்டதும் திடுக்கிட்டு மாதேவப்பா எழுந்தார். உடனே அவர் தீப்பந்தத்தை கொளுத்தி யானைகளை விரட்ட முயன்றார். ஆனால் அவரை யானைகள் விரட்ட தொடங்கியது. இதனால் அவர் யானைகளிடம் இருந்து தப்பித்து அங்கிருந்து ஓடியபோது கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதற்கிடைேய அருகில் உள்ள தோட்டத்தில் காவலுக்கு இருந்தவர்கள் திரண்டு வந்து பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். இதனால் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. உடனே அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த மாதேவப்பாவை மீட்டு கேர்மாளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 

Next Story