தமிழக அமைச்சர்களின் 2-வது ஊழல்பட்டியலை விரைவில் கவர்னரிடம் அளிப்போம் மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழக அமைச்சர்களின் 2-வது ஊழல்பட்டியலை விரைவில் கவர்னரிடம் அளிப்போம் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 15 Feb 2021 6:01 PM GMT (Updated: 15 Feb 2021 6:01 PM GMT)

தமிழக அமைச்சர்களின் 2-வது ஊழல் பட்டியலை விரைவில் கவர்னரிடம் கொடுப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருமயம், பிப்.16-
தமிழக அமைச்சர்களின் 2-வது ஊழல் பட்டியலை விரைவில் கவர்னரிடம் கொடுப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
மனுக்களை வாங்கினார்
புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் மக்களிடம் குறைகளை கேட்டறியும் தேர்தல் பிரசார நிகழ்ச்சி திருமயம் அருகே உள்ள ஊனையூர் கிராமத்தி்ல் நேற்று காலை நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பொதுமக்கள் அமர்ந்திருந்த இருக்கை பகுதிக்கு அவர் நடந்து சென்ற போது சிலர் மனுக்களை மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர். அதனை அவர் பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடம் ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்து சிலவற்றை எடுத்து படித்து பார்த்து மனு அளித்தவர்களை படிக்க வைத்தார்.
2-வது ஊழல் பட்டியல்
அதற்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.
நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
 பொதுமக்களின் அடிப்படை வசதிகள், சாதாரண கோரிக்கைகள் உள்ளாட்சி துறையால் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் இன்றைய உள்ளாட்சி துறை அமைச்சர், ஊழல் ஆட்சி அமைச்சராக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவரது பெயரை மாற்றி வைக்க வேண்டும்.
நான் உள்ளாட்சி துறை அமைச்சராக பணியாற்றியிருக்கிறேன்.  `உள்ளாட்சியில் நல்லாட்சி தந்த அமைச்சர்' என பெருமையாக பேசியிருக்கிறார்கள். நம்பர் 1 கமிஷன், லஞ்சம் வாங்க கூடிய இடத்திலும், முதல்-அமைச்சரையே முந்தக்கூடியவராக இருக்கிறவர் யார் என்றால் உள்ளாட்சி துறை அமைச்சராக இருக்க கூடிய வேலுமணி தான்.
 கவர்னரிடம் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. 2-வது பட்டியலை விரைவில் கவர்னரிடம் கொடுக்கப்பட உள்ளது. கவர்னர் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. அது நமக்கு தெரியும். இருப்பினும் முறைப்படி கொடுத்து வைக்கிறோம்.  தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். வெளியில் இன்று அமைச்சர்களாக உள்ளவர்கள் சிறைக்குள் தான் இருக்க போகிறார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆசிரியர்களுக்கு துணை
ஆசிரியர் தேர்வுக்கான வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 10 லட்சம் ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கிறார்கள். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளாக வேலை இல்லாமல் திண்டாடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வழங்க முடியாத நிலையில் அ.தி.மு.க. அரசு உள்ளது.
ஆசிரியர்களுக்கு தி.மு.க. என்றும் துணையாக நிற்கும். தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர்களின் கவலைகள் போக்கப்படும். அவர்களது நலன் காக்கப்படும். தி.மு.க. கோட்டையாக இருக்கக்கூடிய பகுதிகளில் ஆளும் கட்சியினர் எதுவும் செய்வதில்லை. இங்கு அமைச்சராக உள்ள குட்கா புகழ் விஜயபாஸ்கர், எல்லாவற்றிலும் ஊழல் செய்து விட்டு கொரோனாவிலும் ஊழல் செய்தார். கொரோனாவை பயன்படுத்தி கொள்ளையடித்தவர் யார் என்றால் விஜயபாஸ்கர் தான். குட்கா வழக்கில் சி.பி.ஐ. விசாரணையில் குற்றவாளியாக இருக்க கூடியவர் விஜயபாஸ்கர்.
பண பட்டுவாடா
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வருமான வரித்துறையினர் சோதனையில் பணம் பட்டுவாடா செய்த அமைச்சர்கள் பட்டியல் கண்டுபிடிக்கப்பட்டதில் சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டோர், சிகிச்சை பெற்றோர் எண்ணிக்கைகளை மறைத்தார். மரணத்தையே பொய் சொன்னவர். இதற்கெல்லாம் முடிவு கட்ட இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும்.
தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. பாழ்படுத்திவிட்டது. வெற்றி நடைபோடக்கூடிய தமிழகம், வளமான தமிழகம் என பழனிசாமி கூறுகிறார். ஆனால் இது வெற்று நடை போடக்கூடிய தமிழகம். அமைச்சர்களுக்கு தான் வளமான தமிழகம்.
குடிமராமத்து பணியில் கொள்ளை
 கடந்த 10 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, புதிய முதலீடு இல்லை. மாநில உரிமை பறிபோனது. நீட் தேர்வில் விலக்கு இல்லை. அவர்களது அனைத்து கவனமும் ஊழலில் தான் இருந்தது. எல்லா துறைகளிலும் ஊழல். ஊழல் மூலம் பணக்கொழிக்கும் திட்டங்களை மட்டுமே நிறைவேற்றினர். மாநிலத்தை ரூ.5 லட்சம் கோடி கடனில் மூழ்கடித்துள்ளனர். வரைமுறை இல்லாமல் கடன் வாங்கி கொள்ளையடித்து விட்டனர். குடிமராமத்து பணியில் கொள்ளையடித்து வருகின்றனர்.
ஒரு தொகுதிக்கு தேவையான அவசிய தேவைகளை கூட அ.தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. இதனால் தான் உங்களது கோரிக்கைகளை தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்க்கப்படும் என முன் வைத்துள்ளேன். அரசாங்கம் செய்ய தவறிய கடமையை தி.மு.க. அரசு நிறைவேற்றும். இதனை நிறைவேற்றி கொடுக்கிற போது 1 கோடி குடும்பங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும்.
பழனிசாமி மீது தாக்கு
 நீங்கள் என் மேலே நம்பிக்கை வைத்து மனுக்களை கொடுத்திருக்கிறீர்கள். ஆனால், இதனை பார்த்தால் பழனிசாமிக்கு வயிற்றெரிச்சலாக உள்ளது. 'ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என ஸ்டாலின் காதுகுத்துகிறார்' என்று பழனிசாமி பேசி வருகிறார். காது குத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 'ஒரு திட்டத்தை நான் அறிவிக்கலாம் என இருந்தேன். ஆனால் அதற்கு முன் ஸ்டாலின் கூறி விட்டார்' என பழனிசாமி கூறியது தான் ஒரே நாளில் கோடிக்கணக்கான மக்களுக்கு காது குத்துவது.
தமிழகத்தில் மக்களுக்கு எல்லா வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் கூறியிருக்கிறார். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 2-வது விவசாய புரட்சி திட்டம் என அறிவிக்கப்பட்டது, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த நடவடிக்கை, எல்லா விவசாய கருவிகளும் விவசாயிகளுக்கு இலவசமாக கொடுப்போம், கரும்பு விலையை போல மற்ற விவசாய பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாய விலையை நிர்ணயம் செய்தல், கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை வழங்குதல், சொட்டு நீர் பாசன திட்டத்தை அரசு செலவில் விவசாயிகளுக்கு செய்து கொடுத்தல் என அறிவித்ததை எதுவும் செய்யவில்லை.
 இதேபோல 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் செல்போன், கல்வி கடன் ரத்து, இலவச மடிக்கணினியுடன் இலவச நெட் இணைப்பு, அம்மா பேக்கிங் கார்டு, பொதுஇடங்களில் இலவச வை-பை வசதி, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கூட்டுறவுத்துறை அங்காடி கூப்பன், ஒரு லிட்டர் பால் ரூ.25-க்கு தரப்படும் என சொல்லியிருந்தார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றிவிட்டதாக பழனிசாமி கூறியிருக்கிறார்.
தமிழக முன்னேற்றம்
நான் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். நிறைவேற்ற முடியும் என்ற தைரியத்தில் தான் அத்தாட்சியை கொடுத்திருக்கிறேன். நிறைவேற்ற முடியவில்லை என்றால் என்னிடம் வந்து கேளுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகத்தை 50 ஆண்டு கால பின்னோக்கி சென்றிருப்பதை மாற்றி இந்திய அளவில் தமிழகத்திற்கு முன்னேற்றத்தை தேடி தருவது தான் தி.மு.க. வின் இலக்கு.
 ஊழலற்ற, ஒளிவுமறைவற்ற, பெண்களுக்கு பாதுகாப்பான, ஏழை, எளிய உள்பட அனைத்து மக்களுக்கான அரசாக தி.மு.க. செயல்படும். புதிய தொழிற்சாலை, வேலைவாய்ப்பு, புதிய உள் கட்டமைப்புகளை கொண்டுவருவோம். பெருந்தலைவர் காமராஜர் காலத்து கல்வி வளத்தையும், அண்ணா காலத்து மாநில உரிமையையும், கருணாநிதியின் மக்கள் நலத்திட்டங்களையும் தமிழகத்திற்கு வழங்க கூடிய ஆட்சி காலமாக என்னுடைய ஆட்சி காலம் அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story