கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 15 Feb 2021 6:11 PM GMT (Updated: 15 Feb 2021 6:11 PM GMT)

பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:

கடன்பெற முடியாத நிலை
தமிழகத்தில் கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் உள்ளிட்ட கடந்த மாதம் 31-ந் தேதி வரை நிலுவையில் உள்ள விவசாய கடன்கள் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 53 கூட்டுறவு கடன் சங்கங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை கடன் தள்ளுபடிக்கான தொகை விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த மாதத்தில்(ஜனவரி) 31-ந்தேதி வரை விவசாயிகளுக்கு அனுமதி வழங்கிய கடன்களுக்கான தொகையை விடுவிக்க மத்திய கூட்டுறவு வங்கி காலதாமதம் செய்து வருவதாகவும், இதனால்  கடந்த 31-ந் தேதி வரை கடன் அனுமதி பெற்ற விவசாயிகள் கடன்பெறமுடியாத நிலையும், அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பின்படி சலுகை பெறமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம், அந்தந்த வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு கடன்தொகையை விடுவிக்க காலதாமதம் செய்ததால், ஜனவரி மாதத்தில் விவசாயிகள் வாங்கிய கடன் தொகை கிடைக்கப்பெறவில்லை என்றும், அரசு அறிவித்த கடன் தள்ளுபடி சலுகையும் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தர்ணா
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலமாக கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு முன்பாக விண்ணப்பிக்கப்பட்ட வேளாண் கடன்களுக்கு இதுவரையில் பணம் பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்தும், பணம் பட்டுவாடா செய்யப்படாதவர்களுக்கு தள்ளுபடியும் இல்லை என்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் அதன் நிர்வாகிகள் தெரிவிப்பதை கண்டித்தும், பாரபட்சமின்றி அனைவருக்கும் வேளாண் கடன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
ஏற்கனவே விவசாயிகள் பெற்ற கடன்தொகைகளை அரசு அறிவித்தபடி தள்ளுபடி செய்திடவேண்டும் என்று வலியுறுத்தியும் விவசாயிகள் நேற்று பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர்.

Next Story