தலையில் காயத்துடன் சுற்றிய குட்டி யானை பரிதாப சாவு


குட்டியானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்த காட்சி.
x
குட்டியானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்த காட்சி.
தினத்தந்தி 15 Feb 2021 6:33 PM GMT (Updated: 15 Feb 2021 6:35 PM GMT)

முதுமலையில் தலையில் காயத்துடன் சுற்றிய குட்டி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

கூடலூர்,

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடி வனச்சரக பகுதியில் பிதர்லா பாலம் கும்பாரக்கொல்லி என்ற இடத்தில் சாலையோரம் குட்டி யானை ஒன்று சுற்றி வந்தது.

அங்கு காட்டு யானைகள் இல்லாததால் சந்தேகம் அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வனச்சரகர்கள் சிவக்குமார், தயானந்தன் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

பின்னர் அவர்கள் அந்த குட்டியானையை மீட்டு பரிசோதித்தபோது, அதன் தலையில் பலத்த காயங்கள் இருந்ததை கண்டனர். அத்துடன் அந்த குட்டி மிகவும் பலவீனமாக இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளித்ததுடன், குளுக்கோஸ், மற்றும் இளநீர் கொடுத்தனர். 

முதற்கட்ட சிகிச்சை அளித்த பின்னர் அந்த குட்டி யானையை தாயுடன் சேர்ப்பதற்காக வனப்பகுதியில் விடப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் அதன் பின்னால் சென்றனர்.  தொடர்ந்து முதற்கட்ட சிகிச்சை அளித்த பின்னர் வனத்துக்குள் குட்டி யானை விடப்பட்டது. 

மேலும் தாய் யானையை தேடி செல்லும் வகையில் வன ஊழியர்கள் குட்டி யானையை பின்தொடர்ந்து சென்றனர். ஆனால் அதன் தாய் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.  தொடர்ந்து வனத்துறையினர் அந்த குட்டி யானையை கண்காணித்தனர். அப்போது அது திடீரென்று கீழே விழுந்தது. உடனே வனத்துறையினர்  அங்கு சென்று அதை பரிசோதித்தபோது அது உயிரிழந்தது தெரியவந்தது.  
 இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது.

தாயை பிரிந்து வந்தது 3 மாத ஆண் குட்டி யானை ஆகும். அதன் தலையில் காயம் எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. தலைப்பகுதியில் ஆழமான அ ளவுக்கு காயம் இருந்தது. 

ஏதோ ஒரு வனவிலங்கு தாக்கியதாலோ அ ல்லது கீழே விழுந்து மரக்கட்டைகள் குத்தியதாலோ இந்த காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம். எனினும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே அந்த காயம் எப்படி ஏற்பட்டது என்பது தெரிய வரும். தொடர்ந்து குட்டியானைக்கு ஏற்பட்ட காயம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story