இன்னும் 3 மாதத்தில் மக்களுக்கு சேவை செய்கிற தி.மு.க. அரசு அமையும்; மு.க.ஸ்டாலின் பேச்சு


இன்னும் 3 மாதத்தில் மக்களுக்கு சேவை செய்கிற தி.மு.க. அரசு அமையும்; மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 15 Feb 2021 6:44 PM GMT (Updated: 15 Feb 2021 6:44 PM GMT)

இன்னும் 3 மாதங்களில் மக்களுக்கு சேவை செய்கிற தி.மு.க. அரசு அமையும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

பெரம்பலூர்:

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’
அரியலூர் -பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பிரசார நிகழ்ச்சி அரியலூர்- செந்துறை சாலையில் உள்ள கொல்லாபுரத்தில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசியதாவது:-
தி.மு.க. தான் ஆட்சிக்கு வரப்போகிறது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது என அக்கட்சியினருக்கே தெரிந்து விட்டது. எனவே, பல்வேறு பணிகளுக்கு விரைவாக டெண்டர் விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேவையான கமிஷனை பெற்று சென்று விடலாம் என திட்டமிட்டு செய்கின்றனர். ஒரு கோடிக்கு மேல் டெண்டர் விடப்பட்டால், பொதுப்பணித்துறை மண்டல பொறியாளரே டெண்டர்களை முடிவு செய்யலாம் என திருத்தம் செய்து கடந்த மாதம் விதியை திருத்தி டெண்டர் விட்டுள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளை முறையாக செய்கின்ற ஆட்சி தான் அ.தி.மு.க. ஆட்சி.
அச்சத்தில் இருக்கின்றனர்
அ.தி.மு.க. செய்த ஊழல் குறித்து கவர்னரிடம் உரிய ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தோம். சி.பி.ஐ. விசாரணை நடைபெறாமல் இருக்க உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தடை உத்தரவு பெற்றுள்ளார். உச்சநீதிமன்ற தடை இல்லை எனில், பழனிசாமி தற்போது சிறையில் இருந்திருப்பார். இன்னும் 3 மாதத்தில் அமைய இருக்கக்கூடிய தி.மு.க. ஆட்சி கொள்கை அரசாகவும், மக்களுக்கு சேவை செய்கிற அரசாகவும் தான் அமையும். தற்போது அனைத்து தரப்பு மக்களும் அச்சத்தில் இருக்கின்றனர். வேளாண்மையில் நம்பியிருக்கின்ற விவசாயிகளும், 3 வேளாண் சட்டங்களால் அச்சமடைந்து இருக்கின்றனர். விவசாய சலுகை நீட்டிக்குமா?, குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்குமா? என்ற அச்சத்தில் உள்ளனர். நெசவாளவர்கள் இலவச மின்சாரம் கிடைக்குமா?, தயாரிக்கக்கூடிய துணிகளுக்கு உரிய விலை கிடைக்குமா? என்ற அச்சத்தில் உள்ளனர்.
அரசு ஊழியர்கள் மிரட்டப்படுகின்றனர். போராடுகிற ஊழியர்கள் மீது வழக்குகள் போடப்படுகிறது. சம்பளம் மற்றும் இதர சலுகைகள் பறிக்கப்படுகிறது. ஓய்வூதியாளர்கள் நலன்கள் மொத்தமாக ரத்து செய்யப்படுகிறது. அரசு வேலை வாய்ப்பு வழங்குவதில் ஏராளமான முறைகேடுகள் தலை தூக்கி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவுக்கு தற்போைதய ஆட்சியில் கடன் தரப்படவில்லை.
சாமானியர்களுக்காக ஆட்சி நடத்தியவர்
கருணாநிதி சாமானியர்களுக்காக ஆட்சி நடத்தினார். ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை உருவாக்கினார். வன்னியர் சமூகம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டினை கொடுத்தார். வன்னியர், ஆதிதிராவிடர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. ஆட்சி செய்து கொடுத்துள்ளது. தற்போது ஆட்சியில் இல்லாத நிலையிலும் மக்களுக்காக போராடும் இயக்கமாக தி.மு.க. செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சிறுபான்மையினருக்கு அச்சம் தருவதாக குடியுரிமை சட்டம் மாறி வருகிறது. அதனை எப்போது வேண்டுமானாலும் பா.ஜ.க. அரசு அமல்படுத்தலாம். இந்த அரசு மக்கள் கோரிக்கை வைக்கிற திட்டங்களை செயல்படுத்தவில்லை. பொதுப்பிரச்சினைகள், பொதுமக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை 10 ஆண்டு காலமாக பாழாக்கி விட்டார்கள். பொதுமக்களுக்கு அச்சம் தரக்கூடிய அரசாக அ.தி.மு.க. அரசு மாறி விட்டது. ஆட்சியில் மக்கள் அச்சத்தை போக்கும் அரசாக மட்டுமில்லாமல், மக்கள் வாழ்வாதாரம் வளர்ச்சியடையும் அரசாகவும் தி.மு.க. அரசு அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
குழந்தைகளை கொஞ்சினார்
மேலும் பொதுமக்கள் கூட்டத்தினரிடையே மு.க.ஸ்டாலின் சென்று, அவர்களுக்கு கை கொடுத்தும், அவர்களுடன் செல்போனில் செல்பி எடுத்தும் கொண்டார். கைக்குழந்தைகளை தூக்கி கொஞ்சினார். இதையடுத்து அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்களுக்கு சால்வை அணிவித்து, விருது வழங்கினார். தொடர்ந்து, மக்களின் மனுக்களில் சிலவற்றை எடுத்து படித்த ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்கு வந்த மறுநாளே அனைத்து மாவட்டங்களிலும் பெறப்பட்ட மனுக்களின் பெட்டிகள் திறக்கப்பட்டு 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார். நிகழ்ச்சியில் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிைய முடித்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் கார் மூலம் சென்னைக்கு சென்றார்.

Next Story