மனைவி அடித்துக்கொலை


மனைவி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 15 Feb 2021 9:19 PM GMT (Updated: 15 Feb 2021 9:19 PM GMT)

நாகர்கோவிலில் குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பயங்கர கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
முன்னாள் ராணுவ வீரர்
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் அசோகன் (வயது 55), முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி ஜெயந்தி (49). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மகள்கள் அனைவரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
அசோகனுக்கும், ஜெயந்திக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதும், பின்னர் மகள்கள் அவர்களை சமாதானம் செய்வதுமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்களுக்கு இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மனைவி அடித்து கொலை
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அசோகன், ஜெயந்தியை சரமாறியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஜெயந்தி மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் ஜெயந்தியை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திாியில் சேர்த்தனர்.
அங்கு ஜெயந்திக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்படி இருந்தும் நேற்று மதியம் ஜெயந்தி திடீரென பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த மகள்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களது அழுகுரல் ஆஸ்பத்திரி முழுவதும் சோக மயமாக்கியது.
கைது
தகவல் அறிந்த நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அசோகன் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story