கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகளை ஒப்படைக்க வந்த பொதுமக்கள்


கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகளை ஒப்படைக்க வந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 16 Feb 2021 12:26 AM GMT (Updated: 2021-02-16T05:57:57+05:30)

அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்க வலியுறுத்தி ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க பொதுமக்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ெபாதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி திவாகர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் அடங்கிய மனுக்களை பெற்றார். 
அப்போது, சேலம் லீ பஜார் பாவேந்தர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் அடுக்குமாடி வீடு கட்டி கொடுக்க வலியுறுத்தி ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகளை ஒப்படைக்க சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

240 பேர்

பாவேந்தர் தெருவில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் காலியாக உள்ள ஒரு ஏக்கர் 70 சென்ட் நிலத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் 240 பேருக்கு அடுக்குமாடி வீடு கட்டி கொடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு கொடுத்தோம். இதையொட்டி எங்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க அவர் உத்தரவிட்டார்.
பல மாதங்கள் ஆகியும் எங்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே விரைவில் அடுக்குமாடி வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

பேச்சுவார்த்தை

இது குறித்து அவர்கள் கூறும் போது, எங்களுக்கு அடுக்குமாடி வீடு கட்டி கொடுக்க அரசு உத்தரவிட்டும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே குடியிருப்பு கட்ட வலியுறுத்தி ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைப்பதற்காக எடுத்து வந்தோம். 
ஆனால் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டைகளை ஒப்படைக்க வில்லை. விரைந்து வீடு கட்டி கொடுக்க வில்லை என்றால் ரேஷன், ஆதார் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று கூறினர். 

அண்ணா பூங்கா

தமிழ்நாடு குரும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் கொடுத்த மனுவில், தமிழகத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட குரும்பா, குருமன், குரும்பர் சமுதாயத்தை தமிழக அரசு பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய தேர்தலில் போட்டியிட எங்கள் சமுதாயத்திற்கு உரிய அரசியல் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதே போன்று சேலம் பள்ளப்பட்டி ராவனேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த வக்கீல் சந்திரசேகரன் ஒரு மனு கொடுத்து உள்ளார். அதில் சேலம் அண்ணா பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு நவீன பொழுது போக்கு அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு தனியார் வசம் குத்தகைக்கு விடப்பட்ட போது விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். எனவே அண்ணா பூங்காவை வரும் காலத்தில் சேலம் மாநகராட்சி நிர்வாகமே பராமரிப்பு பணிகளை ஏற்று நடத்த வேண்டும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மாநகராட்சிக்கும் அதிகம் வருவாய் கிடைக்கும் என்று அதில் கூறியுள்ளார்.

Next Story