திருமண நேரத்தில் மணமகன் மாயம்; மணமகள் வீட்டார் சாலை மறியல்


திருமண நேரத்தில் மணமகன் மாயம்; மணமகள் வீட்டார் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Feb 2021 5:53 AM GMT (Updated: 16 Feb 2021 5:53 AM GMT)

திருமண நேரத்தில் மணமகன் மாயமானதால் திருமணம் நின்றுபோனது. இதுபற்றி தாங்கள் அளித்த புகாரை போலீசார் வாங்க மறுப்பதாக கூறி மணமகள் வீட்டார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திரு.வி.க. நகர், 

சென்னை புழல் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், அண்ணாநகர் வெல்கம் காலனியை சேர்ந்த டில்லிபாபு என்ற ஆனந்தன்(வயது 32) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவீட்டு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

நேற்று காலை திருபோரூர் முருகன் கோவிலில் இவர்களின் திருமணமும், மாலையில் கொரட்டூரில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருந்தது. இதற்காக திருமண அழைப்பிதழ்கள் அச்சடித்து இருவீட்டாரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கினர்.

மணமகன் மாயம்

நேற்று காலை பெண் வீட்டார் சார்பில் திருப்போரூர் முருகன் கோவிலில் நடைபெற இருந்த திருமணத்துக்கு செல்வதற்காக தங்கள் உறவினர்களுடன் வேன் வைத்து காத்திருந்தனர். மாப்பிள்ளை வீட்டார் புறப்பட்டு விட்டார்களா? என்று கேட்பதற்காக அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில் அதிகாலையில் தங்கள் மகனை காணவில்லை என ஆனந்தனின் பெற்றோர் திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். மணமகன் மாயமான தகவல் அறிந்ததும் பெண் வீட்டார் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நேற்று காலை நடக்க இருந்த திருமணமும், மாலையில் நடைபெற இருந்த வரவேற்பு நிகழ்ச்சியும் நின்றுபோனது.

சாலை மறியல்

மேலும் மணமகன் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் பெண் வீட்டார் புகார் கொடுத்தனர். நேற்று மாலை வரை சுமார் 10 மணி நேரம் காத்திருந்த பெண்வீட்டார், போலீசார் பாரபட்சம் காட்டுவதாகவும் தங்களது புகாரை ஏற்க மறுப்பதாகவும் கூறி திடீரென போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் செங்கல்பட்டு அருகே இருந்த மாப்பிள்ளை ஆனந்தனை போலீசார் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

திருமணம் நடக்க இருந்த திருப்போரூர் முருகன் கோவிலிலும், வரவேற்பு நடைபெற இருந்த திருமண மண்டபத்துக்கும் மாப்பிள்ளை வீட்டார் முன்பதிவு செய்யவே இல்லை. தற்போது அந்த மண்டபத்தில் வேறு ஒரு திருமணம் நடைபெற்று வருகிறது. மாப்பிள்ளை வீட்டார் திட்டமிட்டு தங்களை ஏமாற்றி விட்டதாக பெண் வீட்டார் சார்பில் குற்றம் சாட்டினர். தொடர்ந்து இருவீட்டாரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருதரப்பினரையும் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திருமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story