புதுவையில் நாளை 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்பு; கல்லூரி மாணவிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடுகிறார்


புதுவையில் நாளை 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்பு; கல்லூரி மாணவிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடுகிறார்
x
தினத்தந்தி 16 Feb 2021 1:02 PM GMT (Updated: 16 Feb 2021 1:02 PM GMT)

புதுச்சேரிக்கு நாளை (புதன்கிழமை) வரும் ராகுல்காந்தி கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடுவது உள்பட 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

மீனவப் பெண்களுடன் சந்திப்பு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை (புதன்கிழமை) புதுச்சேரி வருகிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதன்பின் நண்பகலில் சோலைநகருக்கு சென்று அங்கு மீனவப் பெண்களை சந்தித்து பேசுகிறார். அதன்பின் பாரதிதாசன் கல்லூரி மாணவிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார். இந்த உரையாடலுக்கான இடம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

பொதுக்கூட்டம்
பிற்பகல் 3 மணி அளவில் ரோடியர் மில் திடலுக்கு வருகிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். அதன்பின் சென்னை செல்கிறார். ராகுல்காந்தியின் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ராகுல்காந்தி பேசும் பொதுக்கூட்டத்துக்காக ரோடியர் மில் திடலில் மேடை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், அமைச்சர் ‌ஷாஜகான், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

நிகழ்ச்சி விவரம்
ராகுல்காந்தி நாளை பகல் 12 மணிக்கு புதுவை விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்கின்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் சோலைநகர் செல்கிறார். சோலைநகரில் 12.15 மணி முதல் 1.30 மணிவரை மீனவ கிராமத்தில் பெண்களை சந்தித்து பேசுகிறார். அதன்பின் பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.

பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் ரோடியர் மில் திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். கூட்டம் முடிந்ததும் விமான நிலையம் சென்று சென்னை செல்கிறார்.

Next Story