திருத்தணி அருகே சீரான குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு


திருத்தணி அருகே சீரான குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 Feb 2021 4:39 PM GMT (Updated: 16 Feb 2021 4:39 PM GMT)

திருத்தணி அருகே சீரான குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வேலஞ்சேரி கிராமத்தில் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் நேற்று திருத்தணியில் இருந்து ஆந்திர மாநிலம் நாகலாபுரம் செல்லும் சாலையில் சாலை மறியல் செய்தனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் திருத்தணி போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். சாலை மறியல் செய்த கிராம மக்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுடன் கலந்து பேசி அவர்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து தருவதாக போலீசார் உறுதி அளித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். அதன்பின் சிறிது நேரத்தில்  சுமார் 50 பேர் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தங்களை நேரில் சந்தித்து உறுதி அளித்தால்தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்று கூறினார்கள். இதனால் போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு போலீசார் அமைதியாக கலைந்து செல்லுங்கள் இல்லாவிட்டால் கைது செய்ய நேரிடும் என்று எச்சரித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story