பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று முதல் போராட்டம்


பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று முதல் போராட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2021 7:25 PM GMT (Updated: 16 Feb 2021 7:25 PM GMT)

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் என அந்த கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

நாமக்கல்:
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் என அந்த கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அந்த கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ள நிலையில் உலக நாடுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
வருகிற 22-ந் தேதி ஐ.நா. சபை மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் நடக்க உள்ள நிலையில், இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்த வேண்டும்.
தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்
அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியை முறியடிக்க தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 3-வது அணி அமைவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை அமைந்தாலும், எந்த பயனும் இல்லை. தி.மு.க. தலைமையிலான அணி மகத்தான வெற்றியை பெறும்.
சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளார். இது அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தவே வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
விவசாய விளை பொருட்கள் இடைத்தரகர்களிடம் செல்லும் போதே விலை உயர்கிறது. அதனால், விவசாயிகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்த பயனும் இல்லை. 
வரவேற்கிறோம்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தலை மனதில் வைத்து தான் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ேதர்தலுக்காக செய்தாலும், மக்களுக்காக செய்வதால் நாங்கள் அதை வரவேற்கிறோம். 
மேலும் பொது வாகனங்களுக்கு பல்வேறு வரிகளை வசூல் செய்து விட்டு, சாலை பராமரிப்புக்கு சுங்க கட்டணம், ‘பாஸ்டேக்’ என, பகல் கொள்ளை நடக்கிறது. இதன் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு வட்டியில்லாத மூலதனத்தை பெற்றுத்தருகிறது மத்திய அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story