கவர்னர் கிரண்பெடி திடீர் நீக்கம்


கவர்னர் கிரண்பெடி திடீர் நீக்கம்
x
தினத்தந்தி 16 Feb 2021 9:51 PM GMT (Updated: 16 Feb 2021 9:51 PM GMT)

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி திடீரென நீக்கம் செய்யப்பட்டார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி திடீரென நீக்கம் செய்யப்பட்டார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மோதல் போக்கு
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சி பெரும்பான்மை இடத்தை பெற்று ஆட்சியை பிடித்தது. 
இதையொட்டி புதுவை மாநில கவர்னராக கடந்த 2016-ம்   ஆண்டு  மே  மாதம் 19-ந்  தேதி கிரண்பெடி நியமிக்கப்பட்டார். கவர்னராக பொறுப்பேற்ற உடன் அமைச்சரவைக்கு தெரிவிக்காமல் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து ஆட்சியாளர்களுக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்தநிலையில் அரசு அனுப்பும் கோப்பிற்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி தராமல் தேவையில்லாத கேள்விகளை கேட்டு திருப்பி அனுப்புவதால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுவதாக ஆட்சியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து தடையாக இருந்து வருவதாகவும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
பா.ஜ.க.வினர் எதிர்ப்பு 
இதையொட்டி கிரண்பெடியை கண்டித்து கடந்த 2019-ம் ஆண்டு கவர்னர் மாளிகை முன்பு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். இருப்பினும் மோதல் போக்கு தொடர்ந்து வந்தது. 
சமீபத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல், ஹெல்மெட் விவகாரத்தில் கவர்னர் கெடுபிடி காட்டியதால் புதுவை மாநில பா.ஜ.க.வினரிடம் கூட கவர்னர் கிரண்பெடிக்கு எதிர்ப்பு கிளம்பியது.
கவர்னர் கிரண்பெடியை சந்தித்து இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஹெல்மெட் விவகாரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் அதனை திரும்ப பெற வேண்டும் என்று பா.ஜ.க.வினர் நேரில் வலியுறுத்தினர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதமும் எழுதினர்.
ஆனால் இதில் இருந்து கவர்னர் பின்வாங்கவில்லை.
ஜனாதிபதியிடம் மனு
இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்தை சந்தித்து கவர்னர் கிரண்பெடி மீது பல்வேறு புகார்களை தெரிவித்து அவரை திரும்ப பெறக் கோரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மனு கொடுத்தார்.
இதற்கிடையே புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியில் இருந்து விலகியதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
திரும்ப பெறப்பட்டார்
இந்த நிலையில் நேற்று கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதுச்சேரி மாநிலத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
புதுவை மாநில அரசியலில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது கவர்னர் கிரண்பெடி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story