பிளாஸ்டிக் கழிவு இல்லாத மாவட்டமாகிறது


பிளாஸ்டிக் கழிவு இல்லாத மாவட்டமாகிறது
x
தினத்தந்தி 16 Feb 2021 10:34 PM GMT (Updated: 16 Feb 2021 10:34 PM GMT)

பிளாஸ்டிக் கழிவு இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாறுகிறது. அதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியது.

திருப்பூர்
பிளாஸ்டிக் கழிவு இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாறுகிறது. அதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியது.
மாதிரி மாவட்டம்
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மூலமாக திருப்பூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு ஒரு மாதிரி மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத திருப்பூர் மாவட்டத்தை மாற்றுவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக்கூட்டம்  திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல பொறியாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், மறுசுழற்சி செய்பவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர், கல்லூரி பேராசிரியர்கள், தொழில்துறையினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பிளாஸ்டிக் கழிவு இல்லா திருப்பூர்
இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு முன்னோடி திட்டத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் துணையோடு அதற்கான பூர்வாக பணிகளை மேற்கொள்வதற்கான முதல்கட்ட கூட்டம் நடைபெற்றது. எந்தெந்த முறையில் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தலாம், அவற்றை மறுசுழற்சி செய்வது, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைப்பது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் அழித்து, பயன்பாட்டை குறைத்து பிளாஸ்டிக் கழிவு இல்லா திருப்பூர் மாவட்டம் என்ற நிலையை உருவாக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் அனைவரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story