தடுக்க வழிகள் இல்லாமல் தடுமாற்றம்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் ஈரோடு மாநகரம்- தினசரி நடக்கும் விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம்


தடுக்க வழிகள் இல்லாமல் தடுமாற்றம்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் ஈரோடு மாநகரம்- தினசரி நடக்கும் விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம்
x
தினத்தந்தி 16 Feb 2021 11:47 PM GMT (Updated: 16 Feb 2021 11:47 PM GMT)

ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் தினசரி நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது, இதை தடுக்க வழியில்லாமல் போக்குவரத்து போலீசார் திணறும் நிலை உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் தினசரி நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது, இதை தடுக்க வழியில்லாமல் போக்குவரத்து போலீசார் திணறும் நிலை உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
ஈரோடு மாநகராட்சி பகுதி என்றாலே போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றதாகும். வாகன பெருக்கத்தால் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவது வழக்கம்.
ஈரோட்டில் மேட்டூர் ரோடு சுவஸ்திக் கார்னர், பஸ் நிலையத்தை விட்டு பஸ்கள் வெளியேறும் மூலப்பட்டறை ரோடு சந்திப்பு, நாச்சியப்பா வீதி, அகில்மேடு வீதி, பிரப் ரோடு (மீனாட்சி சுந்தரனார் சாலை), பன்னீர்செல்வம் பூங்கா, கடைவீதிகள், காந்திஜி ரோடு, பெருந்துறை ரோடு, ஈ.வி.என். ரோடு, சென்னிமலை ரோடு, காளைமாடு சிலை, ரெயில்வே நுழைவு பாலம், நாடார் மேடு, மூலப்பாளையம், பெருந்துறை ரோடு, ஆசிரியர் காலனி பிரிவு, பழைய பாளையம், வீரப்பம்பாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம் பிரிவு, திண்டல், நசியனூர் ரோடு, சம்பத்நகர், வில்லரசம்பட்டி, சத்தி ரோடு, வீரப்பன்சத்திரம், சூளை, கனிராவுத்தர் குளம், பவானி ரோடு, அசோகபுரம், லட்சுமி தியேட்டர் பகுதி, பி.பி.அக்ரகாரம், கே.என்.கே.ரோடு, கருங்கல்பாளையம், காவிரி ரோடு, மணிக்கூண்டு, நேதாஜி ரோடு, மரப்பாலம், ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, திருவேங்கடசாமி வீதி என்று மாநகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கும் அளவுக்கு உள்ளன. இதனால் ஆங்காங்கே தொடர்ந்து விபத்துகளும், உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன.
பள்ளம் மேடான ரோடுகள்
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள முக்கிய ரோடுகள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. ஆனால், கிளை சாலைகள், வீதிகள் வழியாக யாரும் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு மேடு பள்ளங்கள், குண்டு-குழிகள் உள்ளன. ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் என்று தொடர்ச்சியாக நடந்து வரும் பணிகளால் தினசரி ரோடுகள் தோண்டப்பட்டு வருகின்றன. எந்த சாலையில் சென்றாலும் ஒரு இடத்தை அடைத்து வைத்துக்கொண்டு வேலை செய்கிறார்கள். இதனால், அந்த சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விடுகிறது. இந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் முக்கிய ரோடுகள் வழியாக திருப்பி விடப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.
காந்திஜி ரோட்டை பொறுத்தவரை எப்போதும் நெரிசல் மிகுந்த ரோடாகவே அது இருக்கும். தற்போது பல மாதங்களாக பெரியார் நகர் பகுதியில் தொடர்ச்சியாக சாலையில் பள்ளங்கள் தோண்டும் பணி நடந்து வருகிறது. இதனால் குறுக்கு சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. அனைத்து வாகனங்களும் காந்திஜி ரோட்டுக்கு வந்து விடுவதால் அது மேலும் பாதிப்புக்கு உள்ளாகிறது. திங்கட்கிழமைகளில் ஜவுளி சந்தை கூடும்போது இன்னும் சிரமமாகி விடுகிறது.
500 கையொப்பங்கள்
பெருந்துறை ரோட்டில் ஆசிரியர் காலனி பிரிவு முதல் திண்டல் வரை போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனங்கள் வேகமாக செல்வது அதிகமாக உள்ளது. கோவை, திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி வரும் பஸ்கள் நெரிசலாக இருக்கும் பகுதிகளிலும் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை ஒலிக்க வைத்துக்கொண்டு வேகமாக செல்கிறார்கள். இதனால் 2 சக்கர வாகனங்களில் வருபவர்கள் அச்சத்திலேயே சாலைகளில் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இதனால் இங்கு அதிக அளவில் விபத்துகள் நடந்து வருகின்றன.
செங்கோடம்பாளையம் பிரிவு பகுதியில் அடிக்கடி பயங்கரமான விபத்துகள் நடந்து, உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. எனவே சாலைகளில் வரும் வாகனங்களின் வேகத்தை தடுக்கும் வகையில் வேகத்தடுப்பு கம்பி வேலிகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுபோல் ஈரோடு வரிசெலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் ஈரோடு மாநகர் பகுதியில், குறிப்பாக பழையபாளையம் பகுதியில் விபத்துகளை தடுக்க வேலிகள் அமைக்கக்கோரி அந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 500 மக்களின் கையொப்பங்கள் பெற்று மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் வழங்கி உள்ளனர்.
திணறல்
இதற்கிடையே பெருந்துறை ரோட்டில் வாகனங்கள் அதிகம் திரும்பும் இணைப்பு சாலை பகுதிகளில் பெயரளவுக்கு போக்குவரத்து போலீசார் தடுப்பு வேலிகள் வைத்து உள்ளனர். 
இதனால், வேகமாக வரும் வாகனங்கள் அனைத்தும், தங்கள் வேகத்தை குறைக்காமல் அப்படியே இடதுபுறமாக ஓரங்கட்டி, அதே வேகத்தில் கடந்து செல்கிறார்கள். இது, சாலையை கடக்க ஓரத்தில் காத்து இருக்கும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. 
பொதுவாக வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த ஒரே சாலையின் 2 பக்கங்களும் இடைவெளி விட்டு தடுப்பு வேலிகள் வைப்பது வழக்கம். ஆனால், ஈரோட்டில் மட்டும் ஒரே ஒரு பக்கத்தில் தடுப்பு வேலிகள் வைத்து இருப்பதால், போக்குவரத்தை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் திணறி வருவதாக தெரிகிறது.
பெருந்துறை ரோடு, சத்தி ரோடு, பூந்துறை ரோடு ஆகியவற்றில் தினசரி நடைபெறும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அதைப்பற்றி அக்கறை செலுத்தி, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story