பணி நிரந்தரம் செய்யக்கோரி டேங்கர் லாரி டிரைவர்கள் தீக்குளிக்க முயற்சி- கவுந்தப்பாடி அருகே பரபரப்பு


பணி நிரந்தரம் செய்யக்கோரி டேங்கர் லாரி டிரைவர்கள் தீக்குளிக்க முயற்சி- கவுந்தப்பாடி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 16 Feb 2021 11:57 PM GMT (Updated: 16 Feb 2021 11:57 PM GMT)

பணி நிரந்தரம் செய்யக்கோரி கவுந்தப்பாடி அருகே தனியார் நிறுவன டேங்கர் லாரி டிரைவர்கள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கவுந்தப்பாடி
பணி நிரந்தரம் செய்யக்கோரி கவுந்தப்பாடி அருகே தனியார் நிறுவன டேங்கர் லாரி டிரைவர்கள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
தடுத்து போராட்டம்
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே பெரியபுலியூர் பகுதியில் எரிசாராய ஆலை உள்ளது. இந்த ஆலையில் உள்ள எரிசாராயத்தை கொண்டு செல்ல தனியார் நிறுவனம் மூலம் டேங்கர் லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த லாரியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 
இந்த நிைலயில் டேங்கர் லாரி டிரைவர்கள் 36-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு அந்த தனியார் லாரி நிறுவனத்துக்கு நேற்று மதியம் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் எரிசாராயம் ஏற்ற வந்த வேறு நிறுவன டேங்கர் லாரியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்தனர். 
தீக்குளிக்க முயற்சி
இதனால் அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் குடும்பத்தினர் திடீரென தங்களுடைய உடலில் மண்எண்ணெைய ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை கண்டதும் அங்கிருந்த போலீசார் சுதாரித்துக்கொண்டு தீக்குளிக்க முயன்றவர்கள் மீது தண்ணீர் ஊற்றி அசம்பாவிதம் நடைபெறாமல் தடுத்தனர். 
இதுகுறித்த தகவல் கிடைத்ததும பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று டிரைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் டிரைவர்கள் கூறுகையில், ‘நாங்கள் இந்த நிறுவனத்தில் 10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை டேங்கர் லாரி டிரைவர்களாக பணியாற்றி வருகிறோம். இந்த நிறுவனம் எங்களுக்கு இதுவரை நிலையான ஊதியம் வழங்கவில்லை. மேலும் கடந்த 8 மாதங்களாக நிறுவனம் இயங்காததால் தங்களுக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் துறையும் நடவடிக்கை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,’ என்றனர். 
பரபரப்பு 
அதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், ‘உங்கள் கோரிக்கைககள் மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த டிரைவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
இதுகுறித்து டேங்கர் லாரி டிரைவர்கள் கூறுகையில், ‘இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படவில்லை எனில், வருகிற 19-ந் தேதி முதல் குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரத போரட்டம் நடத்தப்படும்,’ என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story