ஆசிரியர் வாரிய தேர்வினை 45 வயதுக்கு மேற்பட்டோரும் எழுத பரிசீலனை- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


ஆசிரியர் வாரிய தேர்வினை 45 வயதுக்கு மேற்பட்டோரும் எழுத பரிசீலனை- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 17 Feb 2021 12:10 AM GMT (Updated: 17 Feb 2021 12:10 AM GMT)

ஆசிரிய தேர்வு வாரிய தேர்வுகளை 45 வயதுக்கு மேற்பட்டோரும் எழுத பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்
ஆசிரிய தேர்வு வாரிய தேர்வுகளை 45 வயதுக்கு மேற்பட்டோரும் எழுத பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். 
மினி கிளினிக்குகள்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாகதேவம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கொரவம்பாளையம், கொளப்பலூர் ஆகிய இடங்களில் அம்மா மினிகிளினிக்குகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளின் நலன் கருதி ரூ.12 ஆயிரத்து 100 கோடி கடன் தள்ளுபடி, பொங்கல் பரிசு ரூ.2,500 ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுபோன்ற திட்டங்கள் எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை. அதே போல 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 435 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டியர் ஆட்சி போல தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
மும்முனை மின்சாரம்
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்குவதாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் விடுபட்ட ஏரி, குளங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் வருவாய்த்துறை மூலம் நடைபெற்று வருகிறது. அப்பணிகள் நிறைவு பெற்றவுடன் அங்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை எளிய மக்களுக்காக தமிழகத்தில் 2 ஆயிரம் அம்மா மினிகிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 
பொதுத்தேர்வுகள்
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் மே 4-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நடத்த பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்களின் கருத்துக்களை கேட்டு முதல்-அமைச்சர் முடிவு செய்வார். 
அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. மாதத்தில் முதல் மற்றும் 3-வது சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது  சொல்லமுடியாது.
உருது ஆசிரியர்கள்
உருது படித்த ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளை 45 வயதிற்கு மேற்பட்டோர் எழுத பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது முன்னாள் எம்.பி. காளியப்பன், மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்துரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story